நானும் குமுதம் பத்திரிகையும்



குமுதம் ஒரு ரம்யமான பத்திரிக்கை. பழைய காலங்களில் பெண்கள் படத்தோடு அழகாக வெளிவரும். முதலில் வியாழகிழமைகளிலும் பின்னர் வெள்ளி கிழமைகளிலும் வெளி வரும். எங்கள் வீட்டில் அதை முதலில் வாங்க மாட்டார்கள். ஒரு 'கெட்ட' பத்திரிகையாக தான் அது எனக்கும் அறிமுகமாகியது. ஏனென்றால் அதில் காதல் கதைகள் அதிகமாக வரும் என என் அக்கா சொன்னதால் அதற்கு தடை. எங்கள் வீட்டில். ஆகையால் நான் அதை வெளியில் எங்கள் பகுதியில் உள்ள சின்ன வாசக சாலைகளில் தான் படித்தேன்.

குமுதத்தில் பல சிறுகதைகள், ஜோக்குகள், நல்ல சித்திரங்கள், சினிமா நடிகஈ, நடிகர்கள் போட்டோக்கள், சினிமா விமரிசனங்கள், சித்திர கதைகள், கேள்வி  நேரம், மக்கள் என்று பல வேறு பகுதிகள் இருந்தன.பத்திரிகையின் உரிமையாளரும் ஆசிரியரும் எஸ்.எ.பி அவர்கள் தான். எஸ்.எ.பி. அண்ணாமலை என்பது அவர் முழு பெயர். அவர் தன் பட்டபடிப்பை முடித்தபின் தன் நண்பர் பார்த்தசாரதியுடன் சேர்ந்து குமுதத்தை தொடங்கியதாக கேள்வி பட்டிருக்கிறேன். அவர் BA.,BL படித்திருந்ததாக கேள்வி.அவர் நாட்டுக்கோட்டை செட்டியர் வகுப்பைச்ச சேர்ந்தவர்.
 
நான் ரொம்ப சின்ன பையனாக இருக்கும்போதே குமுதம் படிக்க ஆரம்பித்து விட்டேன். அப்பொது அது நாலணா விலை. அதில் எஸ்.எ.பி, ரா.கி. ரங்கராஜன், துமிலன் , புனிதன், ஜ.ரா.சுந்தரேசன், சாண்டில்யன் என்று பலர் கதைகள் எழுதினார்கள். குமுதம் அப்போது வியாழக்கிழமைகளில் வரும். சாண்டில்யனின் கதைகளில் ஓவியர் 'லதா' வின் சித்திரங்கள் அற்புதமாக இருக்கும்.

எஸ்..பி கதைகள் ரொம்ப சாஃப்டாக, தெளிந்த நீரோடை போல் இருக்கும். எந்த, திடீர் திருப்பங்கள் இல்லாமல் இருக்கும் ஸ்டைல் அவருடையது. அவருடைய  'மலர்கின்ற பருவத்தில்' (அது தான் பெயர் என்று நினைக்கிறேன்) தொடர் கதை, ஹைதிராபாதில் ஆரம்பிப்பதாக எழுதியிருந்தார் ..

ஒரு பணக்கார பையன் தன் பணத்தை எல்லாம் இன்டீரியர் டிசைன் தச்சு வேலையில் விட்டு விட்டு மனம் உடைந்து ஹைதிராபாதை விட்டு புறப்படும் முன்னர் ஒரு முறை கோல் கொண்டா கோட்டைக்கு போய் பார்த்து விடலாம் என்று போகிறான். அங்கு வரும் ஒரு சென்னை பெண் மயங்கி விழ அவளை அவன் காப்பாற்றுகிறான். பின்னர் சென்னை வந்த அவன் அவனையும் அறியாமைல் அந்த பெண்ணின் கார் ஷெட்டிலேயே தன் ஒர்க்ஷாப்பை வைத்து கொள்ள அவர்கள் இடையில் வளரும் காதல் என்று கதை போகிறது. இப்படி அவர் கதைகள் பல. எனக்கு அவர் எழுதும் முறை ஸ்டைல் பிடிக்கும்.

 வேறொரு கதை .ஒரு பணக்கார பையன் பார்க்கின்ற எல்லா பெண்களையும் காதலிக்கிறான், அவள்கள் அவனை ஒதுக்கும் போது தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். அப்படி  ஒருமுறை.தற்கொலை முயற்சியில் இருந்து தன்னை காப்பற்றும் பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண்ணும் ஒரு காரணத்துக்காக தன்னை உபயோகிக்கிறாள் என்று அறிந்த பின் திரும்பவும் தற்கொலை முயற்சி என்று போகிறது கதை.

குமுதத்தில் அதன் ஆசிரியர் குழுவைச்சேர்ந்த எஸ்.எ.பி, ரா.கி ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், துமிலன், புனிதன் என்று பலர் எழுதுவார்கள். துமிலன், புனிதன் யார் என்று எனக்கு தெரியாது. அவர்கள் இந்த முதல் கூறிய மூவரில் யாராவது தானா என்ற அய்யம் உள்ளது. முதலில் கூறிய மூவரும் பல புனைப்பெயரில் எழுதுவார்கள். எஸ்.எ.பி அவர்கள் தான் முதலில் சினிமா விமர்சனங்கள் எழுதினதாக தெரிகிறது. அவர் இரவு காட்சிகளில் மக்களோடு மக்களாக இருந்து படத்தை பார்த்து விமர்சனம் எழுதினாராம்.

குமுதத்தில் ஜோக்குகள் நன்றாக இருக்கும். "விமலா" என்ற ஓவியர் அவற்றுக்கு சித்திரம் தீட்டுவார். சாண்டில்யன் கதைகளுக்கு லதா என்ற ஓவியர் படம் வரைவார்.

ஒலிவதற்கு இடமில்லை என்ற கதை நன்றாக எழுதப்பட்டது. அது நீண்ட கதை. ஆனால் கடைசியில் சரியாக முடிக்கபட வில்லை. இதே போல காஞ்சிபுரத்தான் என்ற கதையும் நன்றாக எழுதப்பட்டது. இரெண்டையும் ர.கி.ர தான் எழுதி இருப்பார் என நினைக்கிறேன்.

ஒரு முறை குமுதம் விமரிசனத்தில்   ‘ நீதிக்கு பின் பாசம் என்ற MGR  படத்தை ‘பாதிக்கு பின் மோசம் என்று எழுதியதற்கு பல ரசிகர்கள் அந்த பத்திரிகையை மிகவும் தாக்கி எழுதினார்கள். அப்படி எழுதினாலும் அதை குமுதம் அடுத்த இதழில்  பிரசுரித்து விடும். தன்னை போற்றிவர்களை விட தூற்றியவர்களை உடனடியாக பிரசுரித்துவிடும் குமுதம்.

ரா.கி.ரா வின் ‘இது சத்யம் என்ற கதை குமுதத்தில் தொடர் கதையாக வந்து பின் சினிமாவாக எடுக்கப்பட்டது. அது எப்படி ஓடியது என்று தெரியவில்லை. ஒரு பாட்டி, மிகுந்த தலை கர்வம் உடையவள், தன் மகன் தன்னை மீறி ஒர் ஏழைப்பெண்னை மணம் செய்து கொண்டான் என்று மகனையும், மருமகளையும் தள்ளி வைக்க, ஏழ்மை தாங்காமல் மகன் தன் தாயை தேடி போய்விட, அந்த மருமகள் தன் ஆண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி அவன் ஒரு யாருமற்ற பெண்ணை வீட்டுக்கு கொண்டு வர என அக்கதை போகிறது.

அரசு என்ற பெயரில், குமுதம் கேள்வி பதில் எழுதினார்கள். அரசு என்பது அண்ணாமலை, ரங்கராஜன், சுந்தரேசன் என்பவர்களின் முதல் எழுத்தாகும்  என சொல்லிக்கொள்வார்கள். இதை ஒரு வாரம் முன் விஜய் டிவி சானலில் கமல ஹாசன் ‘ஒரு கோடி புரோகிராமில் சொன்னார். ஆனால் அவர்களில் இருவர் இப்போது இந்த  உலகில் இல்லை. ஒருவர் (ஜ.ரா.சு) குமுத்தில் இப்போது இல்லை. ஜ.ரா.சுந்தரேசன் தான் ‘அப்புசாமி-சீதாப்பாட்டிகதைகளை எழுதியவர். அதை அவர் ஒரு புனைப்பெயரில் எழுதினார். அந்த புனைப்பெயர் 'பாக்கியம் ராமசாமி' என்பதாகும்.

ரா.கி.ர ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இப்போது தான் அண்மை காலத்தில் அவர் இறவனடி சேர்ந்தார். ரா.கி.ர பல பெயர்களில் ஏராளமான கதைகள், கட்டுரைகள், சிறு கதைகள், மொழி பெயர்ப்புகள் என்று எழுதி உள்ளார். அவரின் ‘பட்டாம்பூச்சி என்ற நாவல்,'பாப்பிலொன்' (Papilon) என்ற பெயரில் ‘ஹென்றி ஷாரியர் என்பவர் எழுதிய சுய சரிதை. ஹென்றி ஷாரியர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு ஒரு ஆளரவமற்ற சிறையில் அடைக்கபட்டவர். பல முறை சிறையில் இருந்து தப்பித்தவர். குஷ்ட ரோகிகளின் தீவில், மனிதர்களை கொல்லும் சிவப்பு இந்தியர்கள் இடம் என்று பல இடங்களில் தஞ்சம் அடைந்தவர். சிவப்பு இந்தியர்களிடம் இருந்தபோது அங்குள்ள இரண்டு சிவப்பிந்திய பெண்களிடம் உறவு கொண்டவர். என்று போகிறது அந்த உலகப்புகழ் பெற்ற சுய சரிதை. அதை அழகு தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதே போல் தான் M.K. பாலனின் ‘தூக்கு மரத்தின் நிழலில் என்ற மலயாள மொழி பெயர்ப்பு. கொலை குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் ஆன எம்.கெ.பாலன் மலயாளத்தில் எழுதியது. அவர் தமிழ் நாட்டில் தான் சிறைப்பட்டிருந்தார்.அந்த சிறை வாழ்ககையும் சக கைதிகளின் கதைகளும் என்று ஸ்வாரஸ்யமாக எழுத்ப்பட்டது. அவர் பின்னர் விடுவிக்கப்பட்டு கேரளாவிற்கு போய் விட்டார்.

அவர் (ரா.கி.ர) பல பெயர்களில் எழுதியதால் அவருக்கு வரவேண்டிய புகழ், பரிசுக்கள், acknowledgement வரவில்லை என ஒருவர் அன்று ஒரு நாள் டிவி நிகழ்ச்சி ஒன்றில் வருத்தப்பட்டு கொண்டார்.

குமுதம் அரசியல் கட்சிகள் எதையும் ஆதரிப்பதில்லை, எஸ்.ஏ.பி காலத்தில். ஆனால் லேசாக காண்கிரஸை ஆதரித்து தலயங்கம் வரும். சுஜாதா ரங்கராஜன் கூட குமுதத்தின் ஆசிரியராக இருந்தார் கொஞ்சம் நாட்கள்.

நான் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் குமுதம், ஆனந்த விகடன் வாங்கி விடுவேன். ஹைதிராபதில் அது வீட்டிற்கே வந்து விடும். ஃபரீதாபாதில் இருந்தபோது நான் டெல்லியில் இருந்து வந்த என் நண்பன் மணிவண்ணனை டெல்லியில் இருந்து வாங்கி வர சொல்வேன். பின்னர் அது ஃபரீதாபாதில் 22ஆம் செக்டரில் கிடைக்கும் என்று தெரிந்த பின் அங்கு போய் வாங்கி வருவேன். ஜெர்மனியில் ஃப்ராங்க்ஃபர்டில் கூட அது கிடைத்தது. கல்பாக்கத்தில் இருந்தபோது என் நண்பர்களுடன் ஒரு குரூப் பண்ணிக்கொண்டு ஒவ்வொருவர் ஒரு பத்திரிகை வாங்கலாம் பின்னர் அதை மாற்றிக்கொளலாம் என்றபோது நண்பர் இளங்கோவன் ‘நான் குமுதம் தான் வாங்குவேன், அதை நான் முதலில் படிப்பேன் என்றார். அவ்வளவு ஆர்வம் அவருக்கு குமுதத்திடம். நானும் பிரிதொரு நண்பரும் ஆனந்த விகடனும் மற்றோரு பத்திரிகையும் வாங்குவதாக ஒப்புகொன்டோம்.

இப்படி குமுதத்தோடு எனக்கு பல காலம் உறவு இருந்தது.

.



Comments

  1. குமுதம் பற்றிய மலரும் நினைவுகள் மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. குமுதம் பற்றி இன்னும் எவ்வளவோ பேசலாம். ஒரு பட்டாம்பூச்சியின் கதையை நானும் விரும்பிப் படித்திருக்கிறேன். வித்தியாசமான கதைகள் நிறையப் படிக்கலாம் குமுதத்தில். நிறையத் தொடர்கதைகளின் பெயர்கள் மறந்து விட்டன. படகுவீடு என்றொரு தொடர்கதை. நன்றாக இருந்தது.
    எங்கள் வீட்டில் கல்கி, ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், குமுதம், மஞ்சரி, கலைமகள், இன்னொன்று (பெயர் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது. வேணுகோபாலன் நிறைய எழுதுவார் அதில். ஆரம்பத்தில் இந்தப் புத்தகங்களில் ஜோக்ஸ் மட்டுமே படிக்க ஆரம்பித்தேன் பின் சிறுகதைகள், தொடர்கதைகள் என்றாகிப் போயின. ஏன் உங்களுக்கு திடீரென்று குமுதம் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது?

    ReplyDelete
  2. உண்மை. அந்த காலங்களில் பத்திரிகை படிப்பது ஒரு நல்ல பொழுதுபோக்கு. குமுதம் நிறைய கதைகள் வெளியிடும். படகு வீடு ஒரு நல்ல கதை நினைவில் உள்ளது. அது எஸ்.ஏ.பி எழுதியது என நினைக்கிறேன். ஒரு பணக்கார பையன் சாமியார் ஆன கதை. காஷ்மீரில் ஒரு பெண் அவனை ஏமாற்றி அதை நம்பி அவன் சாமியார் ஆனது.எங்கள் வீட்டிலும் குமுதம், கல்கி, ஆனந்தவிகடன், மஞ்சரி வாங்குவார்கள். தவிர பல பத்திரிகைகளை நான் எங்கள் வீட்டின் பக்கம் உள்ள வாசக சாலையில் படிப்பேன். கமென்டுக்கு நன்றி. Please continue to read and comment. Thanks.

    ReplyDelete
  3. இந்த கட்டுரை முகனூலில் நான் ஸ்டாஸ் போட்டபோது குமுதம் பத்திரிகையின் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அதைபாற்றி எழுதி இருந்தார். அவர் எஸ்.ஏ.பி, ஜ.ரா.சு, ரங்கராஜன் இவர்கள் கீழ் வேலை செய்ததை பெருமையுடன் எழுதியிருந்தார்.

    ReplyDelete

Post a Comment