எங்கள் வீட்டு கருப்பு பசு



எங்கள் அப்பா திடீரென ஒரு நாள் காலையில் அவருடன் வக்கீலாக இருக்கும் ஒரு முஸ்லிம் நண்பரின் வீட்டிற்கு போவதாக சொல்லி விட்டு போனார். சில மணி நேரம் கழித்து அவர் வந்த போது அவருடன் ஒரு கருப்பு பசுவும், அதன் சிவப்பு கன்றுகுட்டியும் அவற்றுடன்  ஒரு வேலைக்கரானும் அவனுடைய மகனும் கூட வந்தார்கள். அந்த வேலைகாரனுக்கும் அந்த பையனுக்கும் ஏதோ சில்லறை கொடுத்து அனுப்பிவிட்டார் அப்பா. பின்னர் தான் தெரிந்தது அவர் அந்த பசுவை றூ. 100 கொடுத்து வாங்கி வந்து விட்டார் என்று. அப்பாவிற்கோ, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் ஒரு பசுவை பராமரிக்க தெரியாது. பால் வெளியில் தான் வாங்கி வந்தோம்.


எங்கள் வீடு மிகவும் பெரியது. மாடியும் பெரிய, பெரிய ‘ஹால்’ களும், வராந்தாக்களும் என்று ரொம்ப பெரிது. பின் பக்கம் தோட்டமும் இன்னொரு சின்ன வீடும் இருந்தது. இந்த சின்ன வீட்டை வாடகைக்கு இருந்தவர்கள் வேறொருவருக்கு விற்று விட்டு போனதால் பல வருடங்கள் ‘கேஸ்’ நடந்து எங்களுக்கு ஜெயித்தது. அப்பா வக்கீல் ஆதலால் அதுவும் ஒரு உபயோகமான காரணமாக இருந்தது.



அந்த பசுவும் கன்றுகுட்டியும் தோட்டத்தில் உள்ள ஒரு பலா மரத்தின் அடியில் கட்டப்பட்டன. அப்போது தான் எங்களுக்கு புரிந்தது அவர் பசு-கன்றுக்குட்டியை வாங்கி வந்தது. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நாங்கள் தின்று கொண்டிருந்த தோசையை கூட அதற்கு கொடுக்க அது அதை தின்று விட்டு தலயை ஆட்டி முட்ட வந்தது. அதற்கு பெரிதாக எந்த கொம்பும் இல்லை. ஒரு சிறிய 'ட' போல வளைந்த கொம்பும், ஒரு உடைந்த பாதி கொம்பும் தான். கொம்பும் ரொம்ப ஒல்லியாக, கனம் குறைந்து  தான் இருந்தது. ஆகையால் அது முட்டுவது தலையால் இடிப்பது போல தான்.

என் அண்ணன் வைக்கோல், பச்சை புல் வாங்க போனான். வைக்கோல் மட்டும் கிட்டியது. பச்சைபுல் மாலையில் தான் வருமாம். பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் வாங்கி ஊற வைத்தார்கள் எங்கள் அம்மா. 

 பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வாங்கப்போன என் அண்ணனிடம் கடைக்கார பல்லன் ( அவர் பல் தூக்கி கொண்டு வெளியே தெரியும் ஆகையால் அவரை பல்லன் என்று பட்டப்பெயரில் அழைப்பது வழக்கம். பல்லவர்களுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது,)  சட்டை போடாமல் வெற்றுடம்போடு தான் கடையில் இருப்பார். அவர் கடையில் விலை சிறிது அதிகம் என்பதால் ரொம்ப அவசரம் என்றால் மட்டும் அவர் கடையில் சாமாங்கள் வாங்குவோம். 



"என்னா அரிசியை விட்டு விட்டு புண்ணாக்கு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா" என்று கேலியாக கேட்டார் பல்லன் . இதை அண்ணன் வீட்டில் அம்மாவிடம் சொல்ல, அம்மா நல்ல நல்ல வார்த்தைகளால் அவரை அர்சித்தார்.


அவர் பெயர் நாராயண பிள்ளை என நினைக்கிறேன். அவர் கடையில் ‘பலவஞ்சன’ பொருட்கள் கிடைக்கும். சுத்த தமிழில் பலசரக்கு என்பதற்கு சிறந்த மாற்று பெயர் இது, பலவஞ்சனம் . பல்லன் கடையில் ஒரு வேலையாள் இருந்தான். ரோடில் ஏதாவது மாட்டு வண்டியில் அர்சி போவதை பார்த்தால் பல்லன் தன் வேலையாளை அதன் பின்னால் போக சொல்லுவார். அவனும் ஒரு சின்ன ஒரு அடி நீளம் உள்ள கம்பியை எடுத்த்கொண்டு அந்த வண்டி பின்னால் ஓடி அந்த கம்பியால் சாக்கு மூட்டையை குத்தி அதன் உள்ளிருக்கும் அரிசியை கொஞ்சம் எடுத்து வருவான். அதை பல்லன் வாங்கி பார்ப்பார். இது எதற்கு என்று இன்று வரை எனக்கு புரியவில்லை.


பசுவிற்காக ஒரு தொழுவம் கட்டினார்கள். ஓடு வேய்ந்து, சிமன்ட்டு போட்டு நல்ல வீடு போல இருந்தது. பசுவும் குட்டியும் அதில் விடப்பட்டன. பால் கறக்க ஒரு 'கறவைக்காரன்' அமர்த்தப்பட்டார். குண்டாக, வயதான அந்த ஆள் பசுவின் பால் கறக்க காலை மாலை இரண்டு நேரமும் வருவார். பசு 'இரு நாழி' பால் ( 1/2 லிட்டெர்) கறந்தது. பக்கத்து வீட்டு ரெட்டியார் பெண்மணி ( அத்தை என்று கூப்பிடுவோம்)

 "என்ன மைனி (மதினி) அண்ணாச்சி கிழட்டு பசுவை வாங்கிட்டு வந்திட்டாரே" என்று கூறினார்கள்.( திருநெல்வேலி சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர். மைனி என்பது மதினி என்பதின் மருவின பகுதி.)


அம்மா "அந்த ரெட்டிச்சிக்கு எரிச்சல், அவள் வீட்டில் பால் வாங்கவில்லைண்ணு “காண்டு" என்று திட்டினார்கள்.

அந்த பசுவின்  பால் கொஞ்ச நாளில் குறைந்து ஒரு 'நாழி' ஆகி விட்டது. அம்மா அப்படியும் "நம்ம பசுவின் பால் 'நல்ல திக்', எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் ஊற்றலாம்" என்று சந்தோஷ பட்டு கொண்டார்கள்.



பசு நாளோரு பொழுதும் பொழுதொரு வண்ணமாக நல்ல வைக்கோல்,பச்சை புல், தேங்காய் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, எள்ளுப்புண்ணாக்கு என்று தின்று விட்டு நிறைய சாணி போட்டது. எல்லாச்சாணியும்  விற்கப்பட்டது. எனக்கு தெரிந்து அது ஒன்று தான் அந்த பசுவால் கிடைத்த நன்மை.

திடீரென பசு ஒரு நாள் இரவில் 'ம்மா' என்று பெரும் குரல் எழுப்பி கத்தியது. அலறி அடித்துகொண்டு நாங்கள் தூக்கத்தை விட்டு விட்டு ஓடினால் அது ஒன்றும் தெரியாதது போல் எங்களை பார்த்தது. ஒன்றுமில்லை என்று நாங்கள் படுத்த பின் பின்னும் மீண்டும் அது கத்த ஆரம்பித்தது. இரவு முழுதும் கத்திக்கொண்டே இருந்தது. காலையில் 'கறவைக்காரன்' வந்து பார்த்து விட்டு பசுவை 'காளை சேர்க்க வேண்டும்' என்றார்.



அவரே பசுவை பிடித்து கொண்டு காளை சேர்க்க போனார். கூடவே என் அண்ணனையும் அம்மா அனுப்பினார்கள், உண்மையில் காளை சேர்த்தார்களா என்று பார்க்க. பின் பசு திரும்ப வந்தது. ‘காளை சேர்க்க’ ரூபாய் ஐந்து கொடுத்தார்கள் போல. என் அண்ணன் 'அந்த காளை வயசானதாக தோன்றியதாகக் கூறவும் , அம்மா வழக்கம் போல சந்தேகப்பட  எங்கள் தென்னம்தோட்ட காவலாளியுடன் பசு திரும்பவும் காளை சேர போயிற்று.

கொஞ்ச நாளில் அதன் கொஞ்ச நஞ்ச பாலும் குறைந்து போயிற்று.ஆகையால் கறவைக்காரன் நிறுத்தபட்டார். என் சின்ன அண்ணன் , நான், எங்கள் அம்மா  எல்லோரும் பால் கறக்க முயற்சிக்க அந்த பசுவும் நல்ல உதை கொடுத்தது. அரை டம்பளர் பால் கறந்தோம். பழையபடி பால் வெளியில் தான் வாங்கப்பட்டது.


 ‘பல்லன்’ “பசுக்கும் காப்பி கொடுக்கியகளா” என்று கேட்டார். அவர் கடையில் தான் இப்போதும் புண்ணாக்கு வாங்கப்பட்டது.



உண்மையிலே அதன் குளம்பு பட்டால் பயங்கர வேதனை உண்டாகும். சில சமயம் பசுவும், அதன் கன்றும் மிதித்து விடும். தாங்க முடியாத வலி ஏற்படும்.கொஞ்ச நாளில் பால் நின்றே போயிற்று.

சும்மா நின்ற கன்றை எங்கள் அப்பா விற்க பார்த்தார். அதை என் அண்ணன் அப்பா இல்லாத சமயம் கன்றை வாங்க வந்தவரிடம் ‘கன்றை கொடுக்க முடியாது’ என்று சொல்லி அனுப்பி விட்டான். பிரிதொரு சமயம் அப்பா திரும்பவும் வந்த அந்த மாட்டுக்காரனிடம் இருபது ரூபாய்க்கு அந்த கன்றை விற்று விட்டார்.கன்றைக்காணாமல் பசு அன்று முழுதும் 'ம்மா' என்று கத்திக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் பக்கத்து ரெட்டியார் வீட்டு தென்னை மரம் ஒன்று எங்கள் தொழுவத்தில் விழுந்து பாதி தொழுவம் உடைந்து போயிற்று. நல்ல வேளை பசுவுக்கு ஒன்றும் ஆகவில்லை. பசு தனியாக தின்று, சாணி போட்டு, தூங்கி கொண்டிருந்தது.



ஒரு நாள் திடீரென அதன் வயிற்று பகுதியில் ஒரு புண் உண்டாகி ரத்தம் கசிந்தது. பெரிச்சாளி கடித்திருக்கும் என்று மாட்டு வைத்தியர் வந்து பார்த்து ஏதோ களிம்பு கொடுத்தார்.

திடீரென ஒரு நாள் பசு நிற்கமுடியாமல் 'தடால்' என்று விழுந்து விட்டது. மாட்டு வைத்தியர் வந்து பார்த்து இன்ஜேக்க்ஷன் போட வேண்டும் என்று சொல்ல, மருந்து வாங்கப்பட்டது. பெரிய மாட்டு சிரிஞ்சில் அவர் ஊசி போட்டார். ஒவ்வொரு முறையும் அவர் வந்து ஊசி போடும் போது கூலிக்கு ஆட்கள் கூட்டி வந்து பசுவை தூக்கி நிறுத்தினோம். ஒரு நாள் காலையில் பார்த்தால் பசு நான்கு கால்களையும் நீட்டி வாய் பிளந்து செத்து கிடந்தது.

அண்ணன் தென்னம் தோப்பிற்கு போய் காவலாளிடம் சொல்ல அவர்கள் நான்கு பேர்கள் வந்து அந்த பசுவின் கால்களை சேர்த்து கட்டி இடையில் ஒரு மூங்கில் கம்பை சொறுகி தூக்கி கை வண்டியில் வைத்து கொண்டு போனார்கள். அன்று நிஜமாகவே மழை தமிழ் படங்கள் போல் ‘சோ’ என்று கொட்டியது. நாங்கள்  நான்கு நாட்கள் சாப்பிடவில்லை. மனசு கஷ்டமாக இருந்தது.


இரண்டு நாள் கழிந்து தோட்டத்து காவலாளி வீட்டுக்கு வந்தபோது அப்பா அவனிடம் என்ன செய்தீர்கள் என்று கேட்டார். தோலை விற்று விட்டோம், கறியை நாங்கள் சாப்பிட்டு விட்டோம் என்றான்.

அது தான் எங்கள் வீட்டு முதலும் கடேசி பசு

Comments