என் நண்பன் துளசி



இந்த நிகழ்ச்சி நான் இஞ்சினீரிங் படிக்கும் போது நடந்தது. நான் திருவனந்தபுரம் கவர்ன்மென்ட் எஞ்சினீரிங் கல்லூரியில் படித்துவந்தேன். அங்கு இரண்டு வருடம் தோற்றுப்போனால் அந்த பேப்பர்களை பாஸ் செய்தால் தான் அடுத்த வகுப்புக்கு போக முடியும்.

நான் மூன்றாம் வருடம்  படிக்கும்போது இப்படி தோற்ற ஒரு மாணவனாக துளசிதரன் நாயர் வந்து சேர்ந்தான். ரொம்ப ஜாலியான மாணவன். எப்போதும் சிரிப்பும் நையாண்டியும் ஆக திரிவான். தமிழன் ஆகிய என்னுடன் மிகுந்த நட்பு பாராட்டி எப்போதும் என்னருகில் தான் அமர்ந்து கொள்வான். பாதி நாள் கிளாசுக்கு வரமாட்டான். இத்தனைக்கும் PUC இல் அவன் கோல்ட் மெடல் வாங்கியவன். ஹாஸ்டலில் தங்கி படிக்கும்போது வீட்டு பெரியவர்கள் கண்டிப்பு இல்லாததால் 'கொஞ்சம் ' உழப்ப' ஆரபித்து விட்டான்.

கம்யூனிகேஷன் இங்ஜினீரிங் கில் ( Communication engineering) வெரி ஹை ஃப்ரிகெவென்சியில் ( Very High Frequency / VHF) கரண்ட் ஒயரின் ( wire) உள்ளே போகாமல் அதன் மேல் பாகத்தில் தான் போகும். (Current flows on the surface of the conductor) . இதற்கு ஸ்கின் எஃபெக்ட் (Skin effect) என்பார்கள்.

இந்த கரண்ட் ஒயரின் எவ்வளவு உள்ளே போகிறதோ அதை ஸ்கின் டெப்த் (Skin Depth) என்பார்கள். (The depth to which it penetrates is called skin depth.)

ஒரு நாள் இந்த சப்ஜெக்ட் பற்றி கிளாஸ் எடுத்து கொண்டிருந்தார் ஒரு லெக்சரர்.  அவர் நல்ல சிவப்பு நிறமாக இருப்பார். அதனால் அவரை மாணவர்கள் Local Apnaasi' என்றழைப்பர்.  'அப்னாசி' என்றால்  வெளி நாட்டான் என்று பெயர். ( கேரளத்தில் சில பாகங்களில் இப்படி மிக சிவப்பான ஆண் பெண்களை காணலாம். இது கேரளாவில் மேல் நாட்டு / வெளி நாட்டார் வந்து போனதால் வந்த 'வினை'.)

என் பக்கத்தில் உட்கார்ந்து  இருந்த நண்பன் துளசிதரன் நாயர் , அவன் இரவில் வெளியே போய் வந்த, செய்த ' சாகசங்களை' என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான், மலயாளத்தில். நான் அதை கேட்டுக் கொண்டிருந்தாலும் லெக்சரரை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்.

இதனை கவனித்த லெக்சரர் ' துளசி கெட் உப் அண்ட் டெல் மீ வாட் ஈஸ் ஸ்கின் எஃபெக்ட்? (Thulasi get up and tell me what is skin effect) என்றார்.

துளசி கிளாசை கவனிக்கவில்லை, ஆகையால் திருதிரு வென்று முழித்து கொண்டு நின்றான்.

லெக்சரர் இவன் பதில் சொல்லாததால் அவனை கேலி பண்ணவேண்டி
 ' வாட் ஈஸ் யுவர் ஸ்கின் டெப்த்'? (What is your skin depth) என்று கேட்டார்.

 "உன்னுடைய தோலின் திக்னெஸ் என்ன "? ( மலயாளத்தில் தோலின் திக்னெஸ் அதிகம் என்றால் உணர்ச்சி இல்லாத மனிதன் என்று பொருள். அதாவது மானம் இல்லாதவன்.)

துளசி கலங்கவே இல்லை. 'இட் ஈஸ் லெஸ் தான் யுவர்ஸ்', என்றான். (It is less than Yours) ( உன்னுடையதை விட குறைச்சல் தான்).

துளசியை கேலி பண்ண நினைத்த லெக்சரர், தன்னேயே முட்டாளாக்கி கொண்டார். பேசாமல் எங்கள் எல்லோரிடமும் சேர்ந்து சிரித்து மழுப்பினார்.

துளசி பின்னர் ஆர்மியில் சேர்ந்ததாக ஞாபகம்.

Comments