திதி, திவசம் என்னும் மரித்தோருக்கு செய்யும் சடங்குகள்


திதி / திவசம்



நாங்கள் சின்ன பையன்களாக இருக்கும் போது எங்கள் தந்தையார் திவசம் (திதி), அமாவாஸ்யா , மற்ற முக்கிய பண்டிகை நாட்களில் இரவில்  விரதம் (fasting ) இருப்பார். அன்று இரவில் அவருக்கு ‘டிஃபன்(Tiffin) தான். (அது எப்படி டிஃபன் சாப்பிடுவது ‘fasting’  ஆகும் என்று எனக்கு தெரியவில்லை.)

 திவசம் அல்லது திதி என்பது மரித்தவருக்கு / இறந்தவருக்கு செய்யப்படும் சடங்கு. இது அவர்கள் இறந்த நாளில் (அதுவும் ஹிந்து பஞ்சாங்க முறைப்படி கணக்கிடப்படும்). ரொம்ப முக்கிய மான நாள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள் என்று அவர் அவர் இறந்த நாள் படி இந்த சடங்கு செய்யப்படும்.

திவசம் அன்று அதி காலையில் எல்லோரும் எழுந்து குளிக்க வேண்டும். காஃபீ மட்டும் தான் தருவார்கள். மத்தியானம் வரை கொலை பட்டினி. வாத்தியார் / புரொஹிதர் / அய்யர் வந்து திவசம் தொடங்கி நடந்து கொண்டே இருக்கும். அன்று மட்டும் எங்கள் அம்மா தான் சமைக்கணம். ( மற்ற நாட்களில் ஒரு மொட்டை மாமி சமைப்பார். அவர்கள் பெயர் பள்ளதெரு பார்வதி மாமி. பள்ள தெரு என்பது திருவனந்தபுரம் பத்மனாப ஸ்வாமி கோவிலை சுற்றி இருக்கும் அக்ரஹாரத்தில்  ஒரு சிறு  வீதி. மாமிக்கு ஓரெ ஒரு பெண். பாவம் மாமி சிறு வயதிலே கணவரை இழந்து மொட்டை போட்டுகொண்டவர்.). அன்று வடை, பாயசம், எள்ளு உருண்டை என்று அமோகமாக சமையல் நடக்கும்.  நாங்கள் வயிற்றை பிடித்து கொண்டு பசியோடு காத்திருப்போம்.

ஒரு வழியாக மந்திரங்கள் எல்லாம் சொல்லி, நமஸ்காரம் (காலில் விழுந்து கும்பிடுவது) எல்லாம் முடிந்த பின் பிரசாதம் / பிண்டம் / சோறு காக்காவிற்கு படைக்கணம்.  நாங்கள் தோட்ட்த்திற்கு போய் கா, கா,கா என்று கத்தி காக்காவை கூப்பிடுவோம். அன்றைக்கு என்று பார்த்து காக்கா வராது. ஒரு வழியா காக்கா வந்து அந்த சோற்றை கொத்தி தின்றால் தான் அன்று நமக்கு சாப்பாடு. காக்கா வரா விட்டால் பிதுர்க்கள் (இறந்தவர்களின் ஆத்மாக்கள் ) சந்தோஷமாக இல்லை என்று பொருளாம்.

இதே போலத்தான் திதி , அமாவாஸ்யா என்று பல நாட்கள் அப்பா சாப்பிடமாட்டார். அன்று ‘டிஃபன் தான். அதாவது இரவில் சோறு சாப்பிட மாட்டார். நல்ல மணக்க, மணக்க அம்மா தோசை வார்த்து அப்பாவிற்கு கொடுப்பார்கள். தின்ன ‘கொதி யாக இருக்கும். (இந்த கொதி என்பது மலயாளத்தில் சொல்வார்கள். ‘ஆசை என்பது தான் அது. திருநெல்வேலி காரர்களும் ‘கொதி என்று சொல்வார்கள். சில வயிற்று பிரச்சனைகளுக்கு கொதி என்று சொல்லி ஓதுவார்கள். இந்த கொதி என்றால் ‘கண் திருஷ்டியாம். சாப்பிடும்போது யாராவது  வெளியாள் பார்த்தால் ‘கொதிபட்டுவிடுமாம். இதற்கு தான் ஓதி விடுதல். ஓதி விட்டால் 'கொதி' போய் விடுமாம். உண்மையில் எனக்கு தெரிந்தவரை இந்த 'கொதி' அஜீரணத்தால் தான் ஏற்படுகிரது. கொஞ்சம் இஞ்சியை மென்று தின்றாலோ அல்லது சாறு எடுத்து குடித்தாலோ போய் விடும்.)

எங்களுக்கு   தோசை தர மாட்டார்கள். அப்பா இருப்பவர்களுக்கு தர மாட்டார்கள். அப்பா இல்லாதவர்களுக்கு தான் டிஃபன். நல்ல வேடிக்கை. (அது என்ன என்று தெரியவில்லை எங்கள் அம்மா சுட்ட தொசையின் வாசனையை பின்னர் முகர்ந்ததே இல்லை. கட்டியாக பொசு பொசுவெண்று வெள்ளையாக இருக்கும். அந்த காலத்து நல்லெண்ணையோ?). ரொம்ப கத்தி அழுது ஆர்பாட்டம் பண்ணினால் பாதி தோசை கிடைக்கும்.

எங்கள் தந்தையார் சகுனம், பாட்டியம்மை, தெற்கே சூலம், வடக்கே சூலம், அஷ்டமி, நவமி என்று என்னவெல்லாமோ சொல்லி பல காரியங்கள தடை போடுவார். இவ்வளவுக்கும் அவர் நன்கு படித்தவர். வக்கீல்.BA;BL  படித்தவர். தமிழ், மலயாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, இங்கிலீஷ், ஃப்ரென்ச், கொஞ்சம் தெலுங்கு என பல மொழி தெரிந்தவர். கீதை, வேதங்கள், வேதாந்தம் படித்தவர். அப்படியும் இந்த எல்லா ‘மூட நம்பிக்கைகளும் அவருக்கு உண்டு. பயங்கரமான ஜாதி பற்று உண்டு அவருக்கு.

நான் திதி கொடுப்பதில்லை. இந்த மேலே கூறப்பட்ட எந்த நம்பிக்கைகளும் எனக்கு  கொஞ்சம் கூட கிடையாது.

Comments