தேவரடியார்கள். இறைவன் திருப்பணிக்காக வாழ்ந்தவர்கள்



தேவரடியார்கள்.

கீழே தரபட்டிருக்கும் செய்திகள் ஓலை சுவடிகள், செப்பேடுகள், கோவில் கல் வெட்டுக்கல் இவற்றில் இருந்து சேகரிக்கபட்டவை. தமிழ் நாடு தமிழ் வளர்ச்சி கழகம் பிரசுரித்த நூல்களில் இருந்தும் செய்திகள் தரபட்டுள்ளன.

சோழர் காலத்தில் தான் இந்த தேவரடியார்கள் கோவில் திருபணிக்காக தோற்றுவிக்க பட்டனர் என்று தெரிகிறது. புனிதமான தெய்வ பணிகள் அவர்கள் செய்ததால் அவர்களுக்கு சமுதாயத்தில் மிகுந்த நன் மதிப்பும் மரியாதையும் இருந்தன. பாண்டிய நாட்டிலும் இவர்கள் பேணி பாதுகாக்கப்பட்டனர்.

இதனால் பல உயர் குலத்து பெண்களும் இந்த திருப்பணிக்காக தங்களை அற்பணித்துக்கொண்டனர். பலரும் தங்கள் சொத்து சுகங்களை இறைவன் திருப்பணிக்கு தந்து வாழ்க்கை நடத்தினர். இவர்களில் திருமணம் செய்தும் பணி செய்தவர் பலர் உண்டு.

சோழ பெருவேந்தர் காலத்தில் திருகோயில்களில் 'திருஅலகிடல், திருமெழுகிடல், திருவதுக்குரிய (திரு அமுதுக்குரிய)  அரிசியை தூய்மை செய்தல், மலர் தொடுத்தல், பெருக்கி சுத்தம் செய்தல், ஆடல்,பாடல்கள் போன்ற திருப்பணிகளை செய்தவர் 'தேவரடியார்கள் எனப்பட்டனர்.

இவர்களுள் சிலர் தேவாரம்திருவாசகம் ஓதுவாராகவும்,இசையில் வல்லுனராகவும் , நடனம் ,கூத்து போன்ற கலைகளில் சிறந்த பயிற்சி உடையனராகவும் இருந்தனர். இவர்களை “தளிச்சேரிப் பெண்டிர், தளியிலார், பதியிலார், வழியிலார், தேவரடியார், கோயிற்பிணாக்கள், தலைக்கோலிகள் என்று அழைக்கப்பட்டனர்.

திருவண்ணாமமலையில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு ஒன்று "உலகமுடைய பெருமாள் நம்பிராட்டியார் திருவண்ணாமலையின் கீழ்த் தெருவில் தேவரடியாரில் கூத்தாடும் தேவரடியார் உலக முழுதுடையார்" என்று வேறுபடுத்தி காட்டுகிறது.

இசையிலும் நாட்டியத்திலும் வல்ல பதியிலருக்கு சோழ மன்னர்கள் விருது வழங்கி சிறப்பித்தனர். அப்பட்டம் பெற்றவர் "தலைக்கோலி " என்று வழங்க பெற்றனர்."பதியிலாள் நக்கன் அரங்கமான சயம்கொண்ட சோழ தலைக்கோலி, நக்கன் பவழக்குன்றான மதுராங்க தலைகோலி, ஆரூர் தேவனார் மகளான நக்கன் பிரதமாதேவியான மும்முடிசோழத் தலைகோலி " போன்ற இசை வல்லவர்களின் பெயர் கல் வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன.

சிவனுக்கு 'நக்கன்' என்ற பெயரும் உண்டு. சிவன் கோவிலில் பணி புரிந்த தேவரடியார்கள் "உருத்திர கணிகையர் என்று அழைக்கப்பட்டனர்". சிவனுடைய வாகனமான ரிடப (ரிஷப) இலஞ்சனையை தங்கள் உடலில் போறித்து கொள்வர். ஆகையால் இவர்களை "ரிஷபத் தளியர்" என்றும் அழைப்பர்.

திருக்கோயில்களில் பணியற்றும் தேவரடியார்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அரசு வகுத்திருந்தது. திருவெண்காட்டு பெருந்தெருவில் குடியமர்த்தபட்ட தேவரடியார்களுக்கு விதிக்கப்பட்ட நெறிமுறைகளையும் , சிறப்புரிமைகளையும் முதலாம் ராஜ ராஜனின் மதுராந்தகம் கல் வெட்டு கூறுகிறது.

திருவொற்றியூரில் திருவாதிரை விழாவின் போது தேவரடியார்கள் திவெம்பாவையை ஓதினர். இருபத்தி இரண்டு தளியலார் நடனம் ஆடினர். ப்ருவன் நட்டுவாங்கம் செய்தான்.16 தேவரடியார்கள் தேவார பதிகங்களை அகமார்க்க முறையில் பாடினார்கள்.

பதியலார், தளியலார் எனவும் அழைக்கபெற்ற இந்த தேவரடியார்களில் சிலர் மணம் புரிந்து கொண்டு இல்லர வாழ்கை வாழ்ந்து கொண்டும் இறைவன் திருப்பணி செய்திருந்தனர் என்று கல் வெட்டுகள் மூலம் அறியப்படுகின்றன.

இசையிலும் கூத்திலும் வல்லுனராகவும், மக்கள் சமூகத்தில் பெருமதிப்பு பெற்று இருந்தவராகவும் ,செல்வ வளம் உடையவராகவும் விளங்கிய தேவரடியார்கள், தெய்வ பக்தியும், அறச்சிந்தனை உடையவர்களாகவும் விளங்கினர். திருக்கோயில் திருப்பணிகளுக்கும் அறச்சாலைகளுக்கும், கலை வளர்ச்சிக்கும் கொடைகள் பல வழங்கியுள்ளனர்.

சமுதாயத்தின் பல பிரிவு மக்களும் தம் குடும்பத்து பெண்களை திருகோவில்களில் பணி செய்ய தேவரடியார்களாக அமர்த்தினர். இதில் அந்தணர்கள், வேளாளர்கள், பொற்கொல்லர்கள், படை தளபதிகள், அரச குடும்பத்தினர், அமைச்சர் குடும்ப பெண்கள்  என்று எல்லா வீட்டு பெண்களையும் இப்படி தேவரடியார்களாக அளிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

தேவரடியார்கள் என்ற ஒரு சமூக பிரிவு தமிழ் சமுதாயத்தில் பெருமளவில் இடம் பெற தொடங்கியது சோழ பெருவேந்தர் காலத்தில் தான் என்பதும் அவர்களுள் ஒரு பகுதியினர் தெய்வ திருபணியாளர்களாவும் , மற்றொரு பகுதியினர் கலைச்செல்வியினராகவும் தத்தம் கடமைகளை சிறப்பாக வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மைகளாகும்.

இசையிலும் கூத்திலும் வல்லுனராகவும் மக்களிடம் பெருமதிப்பு பெற்றவராகவும், செல்வந்தராகவும் அறமுடனும் வளமுடனும் விளங்கிய தேவரடியார்கள் தெய்வ பக்தியும், அற சிந்தனையுடன் கோவில் திருப்பணிகளை செவ்வன செய்தவர்களாகவும் விளங்கினர். இரக்க சிந்தனையும் கோவில்களுக்கு கொடைகள் கொடுத்து புகழ் பெற்றிருந்தனர்.
Ref: தமிழ் நாட்டு வரலாறு- சோழ பெருவேந்தர் காலம்.(கி.பி. 900-1300)Published by தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை-600 108.

Comments