திருப்பரங்குன்றம் முருகன் பிறந்த ஊர். ( நானும் தான்)



திருப்பரங்குன்றம் மதுரையின் பக்கம் உள்ள ஒரு சிறு கிராமம். (இப்போது அது மதுரையுடன் இணைந்து விட்டது.) அது முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குள்ள சரவண பொய்கையில் தான் முருகன் பிறந்ததாக கூறுவர்.

ஒரு முறை சிவ பெருமான் கோபத்தில் தன் மூன்றாவது கண்ணை திறக்க அதன் ஒளி சரவண பொய்கையில் ஆறு குழந்தைகளாக விழ, தேவ பெண்களான ‘கார்த்திகை பெண்கள் அந்த குழந்தைகளை எடுத்து கொஞ்ச, அக்குழந்தைகள் பாலுக்காக அழ பார்வதி தேவி அக்குழந்தைகளை ஒன்றாக அணைத்து ஞானப்பால் கொடுக்க அந்த ஆறு குழந்தைகளும் ஒரு உடல் ஆறு முகங்களுடன் ஆறுமுக கடவுளாகி விட்டதாக கதைகள் சொல்கின்றன. இந்த கதை சொன்னது என் தாயார்.

அந்த கிராமத்தின் இரண்டு புரங்களிலும் மலைகள் சூழப்பட்டது. பெரிதாக இருக்கும் மலையை குடைந்து முருகனுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை நாயக்க ராஜாக்கள் கட்டியதாக தெரிகிறது. இங்கு முருகன் தன் மனைவி தெய்வானையுடன் இருக்கிறார். தெய்வயானையை அவர் திருமணம் செய்தது இங்கு தான். தெய்வயானை தேவேந்திரனின் மகள் ஆவார்.

மலையை குடைந்து கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவில் பெரியது. மலைமேல் ஏறி போக வசதியாக படிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மலை மேல் ஏறி போனால் அங்கு ஒரு சுனை உள்ளது. திருபரங்குன்றத்தில் ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இங்கிருந்து இரண்டு ஸ்டேஷன் பயணித்துப்போனால் மதுரை உள்ளது.பசுமலை அதன் அடுத்தது மதுரை ஜங்க்ஷன். மதுரை பெரிய ஊர்.

எனக்கும் திருப்பரங்குன்றத்திர்க்கும் ஒரு இணைப்பு உள்ளது. முருகனைப்போல் நானும் அங்கு தான் பிறந்தேன். என் தாயாரின் சொந்த ஊர் அது. நாங்கள் திருவனந்தபுரத்தில் இருந்து அந்த காலத்தில் இரவு எட்டு மணிக்கு ‘செங்கோட்டை பாசஞ்சரில் ஏறி அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு திருப்பரங்குன்றத்தில் இறங்குவோம். அங்கிருந்து ஒரு பொடி நடையாக வீட்டுக்கு போய் விடலாம். எங்கள் தாத்தா வீடு கோவில் எதிரில் இருக்கும் ரோடிலே தான் இருந்தது. அதன் பக்கம் ஒரு மயில் மண்டபம் இருக்கிறது. அதே ரோடில் போனால் ஒரு கண்மாய் வரும். கண்மாய் பக்கமாக ரயில்கள் போகும். ரயில்கள் போவதை எங்கள் தாத்தா வீட்டின் வாசலில்  இருந்து பார்க்கலாம். ஓடி ஓடி ரயில் போவதை பார்ப்போம். ரொம்ப போர் அடித்தால் என் ‘கஸின்களுடன் அவர்கள் ஸ்கூளில் போய் ‘பாடம் படிப்போம். எங்கள் பள்ளி விடுமுறைகளை திருப்பரங்குன்றத்தில் தான் பலமுறை கழித்திருக்கிறோம்.

இங்கு ஒரு பெரிய பிரச்சனை குடி தண்ணீர் தான். அந்த காலத்தில் கோவில் குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேலையாள் வைத்திருப்பார்கள்.அதை சன்னாசி கிணற்று தண்ணீர் என்று சொல்வார்கள். இந்த தண்ணீர் கூட லேசாக உப்பு சுவை வரும். டாய்லெட் எல்லாம் ரோடில் தான். ஏராளம் பன்றிகள் வந்து சுத்தம் செய்து போகும். பெரியவர்கள் ‘தனியாக டாய்லெட் வைத்திருந்தார்கள். அங்கும் பன்றிகள் தங்கள் துப்பரவு தொழிலை செய்யும். விடுமுறை கழிந்து திரும்பி திருவனந்தபுரத்திற்கு  வரும்போது மலை ஆறு மணிக்கு ரெயில் ஏறினால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்வோம்.
இப்போது அதெல்லாம் மாறி கனவு போல் ஆகி விட்டது. ஊரும் ரொம்பத்தான் மாறிவிட்டது.

Comments

Popular Posts