சர்ச் ஃபண்டில் ஓட்டை காலணா
நான் திருவனந்தபுரம் "இன்டெர்மீடியட்" காலேஜில் படிக்கும்போது எங்களுக்கு கெமிஸ்டிரி கிளாஸ் எடுத்தது ஜார்ஜ் வர்கீஸ். இவர் கொஞ்சம் குள்ளமாக, சிகப்பாக, நல்ல கட்டி மீசையுடன் வெள்ளை வேட்டி, சட்டையுடன் வருவார்.
சிரிக்காமலே நல்ல ஜோக்குகள் சொல்வார். இவர் ஜாக்கபைட் கிறிஸ்தவர். கேரளாவில் ஏராளமான உட்பிரிவுகள் உள்ளது கிறிஸ்தவ மதம்.
இவர் சிறு வயதில் சர்சுக்கு போகும் போது 'மாஸ்' முடிந்ததும் சர்ச்சின் ஃபாதர் ஒரு பையை வசூலுக்கு அனுப்புவாராம். அதில் எல்லோரும் அவர்கள் அவர்கள் வசதிக்கு தகுந்த மாதிரி பணம் போடுவார்களாம்.
அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஆண்டதால் அவர்கள் தான் நாணயங்கள் தயாரித்தார்கள். காலணா தான் மிக சிறிய நாணயம். அளவில் அல்ல. வாங்கும் திறனில். அந்த காலணா செப்பு நாணயங்கள். அதில் நடுவில் ஒரு ஓட்டை இருக்கும். ஆகையால் அதை ஓட்டை காலணா என்பார்கள். (அந்த காலத்தில் அந்த ஓட்டை காலணாவிற்கு இரண்டு மிட்டாய் கிடைக்கும்.). 1956 க்கு பின் தான் அந்த நாணயங்கள் வழக்கொழிந்தன.
இந்த சர்ச் 'கலெக்ஷங்களில்' எப்போதுமே ஓட்டை காலணாக்கள் இருப்பதை பார்த்த ஃபாதர் ஒரு முறை சொன்னாராம். "இனி மேல் நான் பையை அனுப்ப போவதில்லை. ஒரு குச்சியைத்தான் அனுப்பப்போறேன். மக்கள அதில் ஓட்டை காலணாவை சொருகி விடலாம்" என்றாராம்.
இதே ஜார்ஜ் வர்கீஸ் ஒருமுறை அடித்த கமென்ட் இப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஒரு முறை எங்கள் கெமிஸ்டிரி கிளாசில் இருந்த கடிகாரத்தில் இருந்த பெண்டிலத்தை யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள். அதை கண்டு பிடிக்க பிரம்ம பிரயத்தனம் நடந்தது. எங்கள் கிளாஸ் தான் அன்று கடைசியாக அங்கு நடந்ததால் ஜார்ஜ் வர்கீஸ் எங்களிடம் "நிங்கள் யாரெங்கிலும் எடுத்திருன்னால் திருச்சி கொடுத்து களையு" ( "நீங்கள் யாராவது எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள்" ) என்று கூறினார்.
அப்போது ஒரு பையன் எழுந்து 'சார் நிங்கள் தன்னே எடுத்திரிக்கும்" என்றான். (நீங்கள் தான் எடுத்திருப்பீர்கள்). அவரிடம் ஜாலியாக பேச சுதந்திரம் எங்களுக்கு உண்டு.
அதற்கு அவர் "எனிக்கு என்ற பெண்டிலும் உண்டு, பெண்டிலம் இல்லாத்த எவனோ எடுத்திரிக்கும்" என்றார். ( எனக்கு என் பெண்டிலம் உள்ளது. பெண்டிலம் இல்லாத யாரோ எடுத்திருப்பார்கள்.)
Comments
Post a Comment