பீமனின் பக்தி- கிருஷ்ணனின் விளக்கம்



 ஒரு கதை மஹா பாரத்தில் உண்டு. அர்ஜுனன் மிக அதிகமாக கிருஷ்ணனிடம் பக்தி கொண்டவன். அதில் கர்வமும் கொண்டவன். இதை அறிந்த கிருஷ்ணன் அவனுக்கு ஒரு பாடம் புகட்ட ஒர் நாள் “அர்ஜுனா வா, இப்படி நடந்து விட்டு வரலாம் "என்று அழைத்துப் போகிறார். அப்படி போகும் போது வழியில் ஏராளமாக மாட்டு வண்டிகள் சாரி சாரியாக வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் பூக்களின் குவியல்கள். இப்படி வண்டி வண்டியாக பூக்கள் போகின்றன. கணக்கு வழக்கு இன்றி போகின்றன வண்டிகளில் பூக்கள்.

 இதைப்பார்த்து ஆச்சர்யம்  அடைந்த அர்ஜுனன் "கிருஷ்ணா எங்கிருந்து இவ்வளவு பூக்கள் வருகின்றன? என்று வினவினான். கிருஷ்ணன் புன்னகைத்து கொண்டு “இது பீமன் செய்யும் பூஜையில் இருந்து வருகிறது" என்றார்.

அர்ஜுனன் நம்பாமல் 'பொய் சொல்லாதே கிருஷ்ணா, பீமன் முரடன் பக்தி இல்லாதவன், அவன் பூஜை செய்து நான் பார்த்ததில்லை. ஆகையால் உண்மையை சொல்" என்றான்.

அதற்கு கிருஷ்ணன் சிரித்தபடி "அர்ஜுனா பூஜை என்பது மணிக்கணக்காக, நாட்கணக்காக உடலை வருத்தி செய்யபடுவதில்லை. உணவு உட்கொள்ளாமலும், நின்று கொண்டும், கஷ்டப்பட்டும் செய்யும் எந்த தவமும் என்னை வருத்துகின்றன. ஏனென்றால் நான் எல்லார் உள்ளிலும் இருக்கிறேன். பீமன் மிக அதிகம்  என்னிடம் பக்தி கொண்டவன். அவன் எந்த வேலை செய்தாலும், எதை நினைத்தாலும், எதை உண்டாலும், தூங்கினாலும், விழித்திருந்தாலும், நடந்தாலும், இருந்தாலும் என்னை நினைத்து  'கிருஷ்ணா உனக்காக செய்கிறேன்' என்று சொல்லி செய்கிறான் . அப்படி அவன் ஒவ்வொரு முறை சொல்லும் போதும் ஒரு  வண்டிப்பூ என்னை வந்து அடைகிறது. அப்படி சேர்ந்த பூகள் தான் இவை" என்றார்.

அகம்பாவம், வீண் கர்வம் கொண்ட அர்ஜுனன் தன் தவறை அறிந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

Comments