திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா



நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கன்யாகுமாரி ஜில்லா திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அதன் பத்மனாபபுரம் தான் அப்போதய திருவிதாங்கூரின் தலை நகர். இப்பொதும் அங்கு ஒரு கொட்டாரம் ( அரண்மனை) உள்ளது. அது  கேரள அரசின் பாதுகாப்பில் தான் இருக்கிறது.

நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது திரு மார்த்தாண்ட வர்மாவின் சிறு வயது பிராயத்தின் வாழ்கை,வரலாறு,  எப்படி அவர் இவ்வளவு பெரிய ஒரு ராஜியத்தை நிறுவினார் என்றெல்லாம் படித்தோம். அப்படி படித்ததில் சில ஸ்வாரஸ்யமான நடந்த கதைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

மார்த்தாண்ட வர்மா மிக சிறு வயதிலேயே அரியணையில் அமர  நேர்ந்தது. அவரை கொன்று அவரிடம் இருந்து நாட்டை பிடித்து எடுக்க இரண்டு குடும்பங்கள் மிகவும் எத்தனித்தன. அவர்கள் 'எட்டு வீட்டு பிள்ளைமார், மாடம்பிமார் என்ற குடும்பங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் நாயர்கள். அப்போதய மன்னரின் படைகளில் நாயர்கள் தான் அதிகம் இருந்தனர். ஆகையால் இவர்கள் கை எப்போதும் ஓங்கி இருந்தது.

சிறு பிராயத்தில் இருந்த மார்த்தாண்ட வர்மாவை கொன்றால் அவர்கள் அரசை பிடுங்கி நாட்டை கைப்பற்றலாம் என்றெண்ணி சிறு குழந்தையான மார்த்தாண்டனை கொல்ல பிரயத்தனம் செய்தனர்.

ஒரு முறை மார்த்தாண்டன் ஒரு கோவிலுக்கு ஸ்வாமி கும்பிட போனார். இதை அறிந்த எதிரிகள் படைகளாக வந்து கோவிலை சுற்றி வளைத்துக்கொண்டனர். செய்வதறியாது திகைத்து போன மார்த்தாணடனை அங்கிருந்த தலைமை பூஜாரி அழைத்து பின்வறுமாறு கூறினார்.( அவர்களை  'போற்றி' என்றழைப்பர். இவர்கள் உடுப்பியில் இருந்து வந்த பிறாமணர்கள். திருவிதாங்கூர் கோவில்களில் இவர்கள் தான் பூஜை புனஸ்காரங்கள் செய்து வந்தனர்).

 " திருமேனி ஒரு காரியம் செய்யணம், இப்போழ் அத்தேகம் புறத்து போயால் அவம்மாறு அத்தேகத்தை கொன்னு களையும். அது கொண்டு அத்தேகம் என்ற தோர்த்து உடுத்து உருளி தலையில் கவிழ்த்து புறத்து போயால், எல்லாரும்  ஞான் ஆணு போகுன்னு என்னு விஸ்வசிச்சு அந்தேகத்தே விட்டு களையும், ஞான் அகத்திருக்காம்" என்றார்.

அரசரை திருமேனி என்றழைப்பர்." அரசே நீங்கள் இப்போது வெளியே போனால் உங்கள் விரோதிகள் உங்களை கொன்று விடுவர். ஆகையால் நீங்கள் என்னுடைய  (தோர்த்து= இடுப்பில் கட்டும் ஓரிழை துண்டு) தோர்த்தை கட்டிக்கொண்டு உருளியை (உருளி= பெரிய வெங்கல பாத்திரம், அகலமாக இருக்கும். பாயசம், சர்கரை பொங்கல் இவை செய்ய உபயோகிப்பது) தலையில் மாட்டிகொண்டு போனால் யாருக்கும் நீங்கள் போவது தெரியாது.  நான் தான் போகிறேன் என்று விட்டு விடுவார்கள் என்றார்.

வேறு வழியின்றி மார்த்தாண்டனும் அப்படியே செய்து வெளியில் வர அவரின் விரோதிகள் அவரை பூஜாரி என்று நினைத்து விட்டு விட்டனர். வெகு நேரம ஆகியும் மார்த்தாண்டன் வராததால்  என்ன செய்வது என்றிருக்கும்போது பூஜாரி மன்னரின் உடையில் வெளியே வர , அவரை மார்த்தாண்டன் என்று நினைத்து அவரை கொன்று விட்டனர்.

இதே போல் வேறோரு முறை மார்த்தாண்டன் தனியாக வரும்போது அவரின் விரோதிகள் அவரை துரத்திக்கொண்டு வந்தனர். அப்படி ஓடி வந்த மார்த்தாண்டன் ஒரு பெரிய பலா மரத்தைக்கண்டார். அந்த மரத்தில் ஒரு பெரிய பொந்தும் இருந்த்து. அவர் அந்த பொந்தில் ஏறி ஒளிந்து கொண்டார். துரத்தி வந்த எதிரிகள் அவரைக்காணாமல் திரும்பி சென்றனர். அந்த பலா மரத்தை 'அம்மச்சி பலா' என்று மக்கள் வழி பட்டனர். அம்மரம் பல காலம் அங்கிருந்தது.

இப்படி பல கொலை முயற்சிகளை முறியடித்து அரியணை ஏறிய மார்த்தாண்ட வர்மா தன் சிறிய வேணாடு நாட்டை பல போர்கள் செய்து பெரிதாக்கி திருவிதாங்கூர் என்ற பெயரோடு ஆட்சி செய்தார். தலை நகரை பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றி, அங்கிருந்த பத்மனாபஸ்வாமி கோவிலை பெரிதாக கட்டி, அதனை சுற்றி பெரிய கோட்டை மதில் எழுப்பினார். 

அது இப்போதும் உள்ளது.தன் உடைவாளை ஸ்வாமி முன் வைத்து சிரம் தாழ்த்தி வணங்கி நாடை ஸ்வாமிக்கு சமர்ப்பித்து ஸ்வாமிக்காக தானும் தன் சந்த்தியினரும் அரசாளுவதாக சத்தியம் செய்து நாட்டை ஆண்டார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் பத்மனாபதாசர்கள் என அழைக்கப்பட்டனர்.உலக சரித்திரத்தில் இப்படி கடவுளின் வேலையாளர்களாக ஆட்சி செய்த்தவர்கள் யாரும் எனக்கு தெரிந்து இல்லை.

Comments