ஒரு நல்ல கதை-பழைய குமுதத்தில் படித்த ஒரு கதையின் சுருக்கம்.



ரொம்ப, ரொம்ப வருடங்களுக்கு முன் குமுதத்தில் படித்த ஒரு கதை ஞாபகம் வருகிறது. பெயர்கள், வர்ணனைகள் எல்லாம் ஞாபகம் இல்லை. மனதில் பதிந்ததால் நினைவுற்று எனக்கு தெரிந்த மாதிரி தந்துள்ளேன். நினைவிருக்கட்டும் இது என் கதை அல்ல. குமுதம் பத்திரிகையில் பல பல வருடங்களுக்கு முன் வந்தது. சிறு கதையாக. குமுதத்தில் அதன் ஆசிரியர்களே புனை பெயரில் எழுதுவார்கள். இது அனேகமாக ஜ. ரா. சுந்தரேசன் அவர்கள் எழுதியிருக்கலாம் என் நினைக்கிறேன். அதனூடே இழையோடும்  நகைசுவையை கண்டு. ஜா. ரா. சுந்தரேஸன் தான் "அப்புசாமியும் சீதாப்பாட்டியும்' கதைகள் எழுதியவர். குமுதத்தில் பல காலம் ஆசிரியராக இருந்தவர்.இது ஒரு விமரிசனம், கதையை காப்பி அடிக்கவில்லை. கதை இன்னும் நன்றாக பல பக்கங்களில் எழுதப்பட்டது. கதாபாத்திரங்களின் பெயரும் கூட வேறு தான். நினைவில் இல்லாததால்.

இப்போது அந்த சிறு கதை.

அது ஒரு ஒண்டுகுடித்தின வீடு. பல குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. அதில் ஒரு ஏழை பாட்டி தன் மன வளர்ச்சி குன்றிய 25 வயது மகனுடன் வசித்து வருகிறாள். வீட்டுக்காரர் ரொம்ப பெரிய மனது படைத்து ஒரு சிறு, இருட்டு ரூமை குறைந்த வாடகைக்கு கொடுத்திருந்தார். பாட்டி சமையல், மற்ற குற்றேவல்கள் செய்து கஷ்டப்பட்டு வாழ்கை நடத்தி வந்தாள். பையன் பெயர் ராஜு, சிறு குழந்தைகளுடன் பட்டம் விட்டோ, கோலி கூண்டு விளையாடியோ மற்றவர்களின் ஏச்சு பேச்சுக்கு ஆளாய்கொண்டிருந்தான்.ஐந்து வயது குழந்தையின் மன பக்குவம் தான் அவனுக்கு.ஆனால் ஆஜானுபாவனாக, பார்க்க அழகாக, சிவப்பாக இருப்பான். அந்த பையனால் பாட்டிக்கு பயங்கர எதிர்ப்பு அங்கே. அந்த பையனால் தொல்லை என அங்கிருந்தவர்கள் எல்லோரும் கூறி அவர்களை அங்கிருந்து விரட்ட வீட்டுக்காரரை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். அவர் இரக்கம் பார்த்து பாட்டியை அங்கு தங்க வைத்திருந்தார்.

பாட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்ததில் சுசீலா ரொம்ப முக்கிய பாத்திரம். அந்த பையனை எப்போதும் குற்றம் சொல்லிகொண்டிருப்பாள். குளிக்கும் போது எட்டி பார்த்தான், மேலே இடித்தான், முறைத்து பார்த்தான், கையை பிடித்தான் என்றெல்லாம் சொல்லி பாட்டியையும், மகனையும் விரட்ட பார்த்துக்கொண்டிருந்தாள். மற்ற குடித்தினகாரர்களும் தாளம் போட்டார்கள். ஓரெ ஒரு கன்னட மாமி மட்டும் மாமிக்கு ஆதரவாக பேசுவாள். "பாவம் என்ன செய்வாள் மாமி இப்படி ஒரு பையனை வைத்துக்கொண்டு?" என்று.

ஒரு நாள் சுசீலா குளிக்க போயிருந்தாள். சுசீலா ஆத்துக்கார மாமா பக்கத்து வீட்டில் 'ஓசு' மூக்கு பொடி வாங்க போயிருந்தார். சுசீலா குளியிலறையில் இருந்து "ஏன்னா சேலை எடுத்துட்டு வாங்கோ" என்று இரைந்து கத்தினாள். மாமா இல்லாததால் ராஜூ இதைகேட்டுவிட்டு ஒரு கம்பை எடுத்து மேலே கயற்றில் தொங்கி கொண்டிருந்த சுசீலாவின் சேலையை தொடாமல், மாமா எடுப்பதை போல் எடுத்து குளியல் அறைக்கு போய் நீட்டினான். மாமா தான் வந்து விட்டார் என்று கதவை திறந்த சுசீலா ‘வீல் என்று கத்தி ஆர்பாட்டம பண்ணி விட்டாள். மற்ற ஆள்கள் கூட மாமாவும் வந்து ராஜூ வை ‘பளார், பளார் என்று அறைந்தார். சுசீலா உடனடியாக அவர்களை வீட்டை விட்டு அனுப்ப சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர். கன்னட மாமி "பவம் இந்த வயதில் இந்த மாமி எங்கே போவாள் இவ்வளவு பெரியெ பையனை வச்சுண்டு என்று சொன்னவள், அங்கு இருந்த எதிர்ப்பைப்பார்த்து வாயை மூடிக்கொண்டாள்.

வேறு வழி இன்றி  பாட்டி ராஜூவை அழைத்துக்கொண்டு கிளம்பி ஒரு குப்பத்தில் ஒரு குடிசையை வாடக்கைக்கு அமர்த்திக்கொண்டாள்.

 ராஜூவிடம் "இனிமே அந்த வீட்டுக்கு போககூடாது, சுசீலாவை பார்க்ககூடாது"என்று சத்தியம் வாங்கி கொண்டாள்.

புது இடம் பாட்டிக்கு கஷ்டமாக த்தான் இருந்தது.அன்று இரவு ராஜூவை திடீரென காணவில்லை. எழுந்து பார்த்த மாமி "ராஜூ, ராஜூ" என்று விளிக்க பக்கத்து குடிசைக்காரன் "யாருடி அது கசுமாலம் ராத்திரி ராஜூ, ராஜூன்னு ஆம்பிளே தேட்றே" என்று கூவினான்.

பாட்டி கஷ்டத்துடன் இருட்டில் ராஜூவை தேடி போனாள். எங்கிருந்தோ ராஜூ நடந்து வந்தான். பையனை பாசத்துடன் கட்டி பிடித்து “எங்கடா போனே ராஜா என்று பாட்டி கேட்டாள்.

"சொல்லமாட்டேன்,  நீ அடிப்பே" என்றான் ராஜூ. 

இல்லை அடிக்க மாட்டேன் என்றாள் மாமி.

“சுசீலா மாமியை பாக்க போனேன் என்றான் ராஜூ. 

பாட்டி பளார் என்று அறைஞ்சாள். “ஏண்டா போனே, நான் தான் அவளைப் பார்க்க கூடாதுன்னு சொன்னேனே என்றாள்.

ராஜூ “போம்மா, அடிக்கமாட்டேன்னுட்டு அடிக்கிறயே, சாமி உன் கண்ணை குத்துவார். என்றான்.

“சரி சொல்லு ஏன் அங்கே போனாய் அவர்களுக்கு ஒன்னே பிடிக்காதேன்னாள் பாட்டி.

“போம்மா, கார்த்தாலே சுசீலா மாமி ஆத்துக்காரர் எங்கேயோ வெளியூருக்கு போரேன்னார். சுசீலா மாமி நான் தனியா இருக்கமாட்டேன் பயமா இருக்கும் நீங்க போகாதேள்ன்னாள். அவ தனியா இருப்பான்னேட்டு தான் நான் போய் தொணையா இருக்கலாம்னுட்டு போனேன் என்றான்.

பாட்டிக்கு எரிச்சல் தாங்கல்லே. “பின்னே ஏண்டா திரும்பி வந்தேன்னாள்.

அங்கே போய் பாத்தா சுசீலா மாமி தனியா இல்லை வேரொரு மாமா மடியிலே படுத்துண்டு, கட்டிபிடிச்சு, சிரிச்சி சந்தோஷமா இருக்கா என்றான்.

பாட்டி  குற்றம் குறையில்லாத அந்த குழந்தையை கட்டி அணைத்துகொண்டாள். என்று முடிகிறது கதை.


Comments