நள தமயந்தி கதை



நான் SSLC படிக்கும் போது ‘நள வெண்பா பாடம் படித்தது இப்போதும் நினைவில் உள்ளது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான இது ‘புகழேந்தி புலவரால் எழுதப்பட்டது.

மஹா பாரதத்தின் துணை கதைகளின் ஒன்றானது நள தமயந்தி கதை இது. நளன் ஒரு புகழ்பெற்ற அரசன். அவன் தன் நாட்டை அழகுற அரசாண்டு வந்தான். திருமணமாகாத அவன் ஒரு நாள் ஒரு அழகிய அன்னப்பறவையை தன் தோட்டத்தில் கண்டான். மருண்ட  பார்வையுடன் அழகாக நடந்து சென்றது அந்த அன்னப்பறவை.

அந்த அழகான அன்னப் பறவையை கண்ட நளன் அதனை பிடிக்க தன் சேவகர்களை அனுப்பி அதனை பிடிக்க செய்ய, அவர்களும் அதனை பிடித்து நளன் முன் வைத்தனர். அஞ்சி, நடு நடுங்கி இருந்த அந்த அன்னத்தை நளன் ஆறுதல் பண்ண பின் வருமாறு கூறினான்.

“அஞ்சேல் மட அன்னமே, உந்தன் அணி நடையும்
வஞ்சி அனையர் மணி நடையும் விஞ்சியது காண பிடித்தனன்

என்கிறான். அஞ்சாதே மடம் ( அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்ற நான்கு குணங்களில் ஒன்றான ‘மடம்) என்ற குணத்தை உடைய அன்னமே. உன் அழகிய நடை, பெண்களின்  நடையை ஒத்திருக்கிறதா என காணத்தான் பிடித்தனன் என்று பொருள்.

அன்னம் அச்சம்  நீங்கி அரசனிடம் பேச ஆரம்பித்த்து. அக்காலத்தில் பறவைகள் பேசுமாம். முதலில் தன்னைப்பற்றி சொன்ன அந்த அன்னம் பின் நளனின் அழகைக்கண்டு அது  அரசே உன் அழகுக்கு ஈடு தமயந்தி என்ற அரச குமாரி தான் என்று கூறி தமயந்தியை பற்றி சிலாகித்து பேசியது.


'நாற் குணமும் நாற்படையாம்
ஐம்புலனும் நல் அமைச்சர்
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசாம், வேற்படையும்
வாளுமே கண்ணாம் வதனமதிக் குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.'

அவளின் நான்கு குணங்களும் நான்கு படைகள் (யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை, தேர்ப்படை), ஐந்து புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு,தேகம் இவை அமைச்சர்களாகவும், காலில் இருக்கும் சிலம்பு முரசாக ஒலிக்க, அவள் கண்கள் வேல்படையாகவும், வாள்படையாகவும் இருக்க, அழகிய சந்திரனை ஒத்த முகமுடைய பெண்ணாக ஆள்பவள் தமயந்தி என்கிறது அன்னம்.

பின்னர் அது தமந்தியின் அழகை பற்றி நளனிடம் சொல்லி அவனுக்கு தகுந்த மனைவி அவள் தான் என்றது. தமயந்தியிடம் மையல் கொண்டான் நளன். அதனை தமயந்தியிடம் தூது அனுப்புகிறான் நளன்.

தமந்தியிடம் சென்று அன்னம், நலனைப்பற்றி புகழ்ந்து கூறுகிறது.

‘செம்மனத்தான், தண்ணொளியான்
செங்கோலான், மங்கையர் தன் மனத்தே
வாங்கும் நடந்தோளான், நளன் என்பான்

என்று நளனின் புகழ் கூறுகிறது.
செம்மையான(செம்மை= சிறப்பு)  மனத்தை உடையவன், குளிர்ந்த ஒளி உடையவன், செம்மையாக (சிறப்பாக) ஆட்சி புரிபவன், பெண்களின் மனத்தை கொள்ளை கொள்பவன், பெரும் தோளுடையவன்  நளன் என்கிறது.

நளனின் புகழைக்கேட்ட தமந்தி நளன் பால் காதல் கொள்கிறாள். தன் தந்தை தனக்கு சுயவரம் வைத்திருப்பதால் அதற்கு நளனை பங்கு பெற அழைக்கிறாள். நளனும் சுயவரத்திற்கு வந்து சேருகிறான். தமயந்தியின் அழகை பற்றி கேட்ட பல மன்னர்கள் வருகிறார்கள். அவள் அழகை கேட்டு ஐந்து தேவர்களும் சுயம்வரத்திற்கு வருகிறார்கள். தமயந்தி நளன்பால் மையல் கொண்டதை அறிந்து அவர்கள் நளனைப்போல் உருமாறி வந்து சபையில் அமர்ந்திருந்தார்கள். 

தமயந்திக்குஒரே குழப்பம். இந்த அறுவரில் யார் நளன் என்று. யோசிக்கிறாள். தேவர்கள் கண்ணிமைக்கமாட்டார்கள் என்று அறிந்து அவர்களில் நளனைக்கண்டு அவன் கழுத்தில் மாலை இடுகிறாள். தேவர்கள் காலில் விழுந்து வணங்கி தமயந்தி தன்னை மன்னிக்க வேண்டுகிறாள். அவமானப்பட்டு திரும்பி செல்கிறார்கள் தேவர்கள். இதில் சனி பகவான் மட்டும் வன்மத்தோடு  நளனை தண்டிக்க சமயம் நோக்கி இருக்கிறார். ஒரு நாள் நளன் தன் பின்னங்காலை சரியாக கழுவாமல் சந்தியாவந்தனம் செய்கிறான். அப்போது சனி பகவான் அவனைக் கெட்டியாக பிடித்துகொள்கிறார்.

இதற்கிடையில் தமந்தியை மணந்துகொண்ட நளனுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.

சனி பகவனால் பீடிக்கப்பட்ட நளன் புஷ்கரன் என்றவனிடம் சூதாடி தன் நாட்டையும், பொருட்களையும் இழக்கிறான். அவனை புஷ்கரன் நாட்டை விட்டு வெளியேற்றுகிறான். காட்டில் இருக்கும்போது ஒரு பறவை அவன் உடைகளை எடுத்துக்கொண்டு போக தன் மனைவியின் சேலையின் ஒரு பாதியை கட்டிக்கொண்டு தூங்குகிறான். தன் கஷ்டங்கள் தன்னோடு போகட்டும் மனைவி தன் பிள்ளைகளுடன் அவளின் தந்தையிடம் போகட்டும் என்று நினைத்து இரவில் எழுந்து சேலையை துண்டித்து தன் மனைவியையும் குழந்தைகளையும் விட்டு பிரிந்து போகிறான், தன்னுடன் அவர்களும் சேர்ந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற  நினைவில்.

தனியே விடப்பட்ட தமந்தி தன் நாட்டிற்கு தந்தையிட போக எண்ணுகிறாள்.. திரும்பி போகிறாள். காட்டில் திரிந்த நளன் ஒரு பாம்பு தீயில் விழுவதைக்கண்டு அதனை காப்பாற்றுகிறான். அது அவனை தீண்டுகிறது. கடிபட்ட நளன் கருப்பாக விகாரமாக மாறுகிறான். அவன் அந்த பாம்பிடம் “ஏன் இப்படி நன்றி இல்லாமல் செய்தாய்? என்று கேட்க, அப்பாம்பு ‘மகனே இந்த உடல் மாற்றம் உனக்கு உதவியாக இருக்கும் என்று சொல்லி ஒரு அற்புதமான ஆடையை கொடுத்து இதை எப்போது நீ அணிகிறாயோ அப்போது உன் சுய உருவம் கிடைக்கும் என்று சொல்லி போகிறது.

உருமாறிய நளன் அயோத்தி மன்னனின் தேர் ஒட்டியாக வேலைக்கு அமர்கிறான். அந்த மன்னனுக்கு தேரோட்டும் வித்தையை கற்பிக்கிறான். நளன் மிக வேகமாக தேரோட்டுவான். அந்த மன்னனும் நளனுக்கு ஒரு மரத்தில் உள்ள இலைகளை கணத்தில் எப்படி எண்ணுவது என்ற ரகசியத்தை சொல்லிக்கொடுக்கிறான்.

இப்படி இருக்க தமயந்தி நளனை கண்டு பிடிக்க ஒரு புது உபாயத்தை செய்கிறாள். தனக்கு மீண்டும் சுயவரம் என்று அறிவிக்கிறாள். எல்லா மன்னர்களும் வருகிறார்கள். அயோத்தி மன்னன் தானும் அந்த சுயவரத்தில் கலந்து கொள்ள எண்ணி நளன் உதவியால் தேரை விரைவாக ஓட்ட வைத்து  மிக வேகமாக வந்து விடுகிறான். இந்த சமத்தில் நளனை பிடித்த சனி பகவானும் ஏழரை ஆண்டுகள் போய்விட்டதால் நளனை விட்டு போய்விடுகிறார். பாம்பு தந்த ஆடையை அணிந்த நளன் சுய உருவம் பெறுகிறான். சுயம்வர மேடையில் நளனைக்கண்ட தமந்தி உணமையை சொல்லி நளனுடன் சேர்கிறாள். சனி தசை முடிந்த அவர்கள் பல ஆண்டுகள் ஆட்சி செய்து நலமாக இருந்தார்கள்.

சனி பகவான் நளன் முன் தோன்றி அவன் கஷ்டங்களுக்கு வருத்தம் தெரிவித்து ஏதேனும் வரம் வேண்டுமானால் கேள் என்று சொல்ல நளனும் நானும் என் மனைவியும் பட்ட துன்பங்கள் வேறு யாரும் படக்கூடாது ஆகையால் என் கதையை படிப்பவர்களுக்க் நீங்கள் தீமை செய்யலாகாது என வேண்ட சனியும் அப்படியே செய்வதாக சொல்லி மறைந்தார்..



Comments

  1. நளன் கதையை அருமையாக எளிதில் விளங்க வைத்துள்ளீர்கள்.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி அம்மா. தங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி. உண்மையில் தங்கள் படித்ததற்கும் மிக்க நன்றி. இப்படி தங்கள் எழுதியது எனக்கு டானிக் குடித்தது போல் உள்ளது. தங்களையும், தங்கள் கணவரையும் தவிர யாரும் இதுவரை எந்த comment ம் எழுதவில்லை. அதற்கும் நன்றி. Really very nice of you. Have a very nice day.

    ReplyDelete

Post a Comment