ராஜ ராஜ சோழன் - அவனுக்கு முந்தய சோழர்கள்





ராஜ ராஜன் – சோழ பேருவேந்தர்.

சரித்திரம் என்பது நமக்கு முன் நடந்தது. நம்முடைய மூதாதையர் செய்த அரும் செயல்கள், தவறுகள் எல்லாம் தெரிய அதை படிக்க வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டின் பொற்காலமாக விளங்கியது சோழர்கள் ஆட்சி தான். இவர்கள் பல காலங்களில் தமிழ் நாட்டை ஆட்சி செய்தார்கள். பிற்கால சோழர்கள் வரலாறு தான்  கிடைத்திருக்கிறது. சோழ நாடு சோறுடைத்து என்பர். அவ்வளவு செழிப்பாக காவேரி ஆற்றின் கருணையால் தமிழ் நாட்டின் அரிசிக் களஞ்சியமாக திகழ்ந்தது. சோழ மன்னர்கள் வேளாண்மைக்காக கட்டிய கல்லணை, வீர நாராயண ஏரி இவற்றால் விவசாயம் செழித்து வளர்ந்தது.

சோழர்கள் பலவேறு சமயங்களில் தமிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்.  சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் வீழ்ச்சிக்கு பின் காணாமல் போன சோழ சாம்ராஜ்யம் விஜயாலய சோழன் காலத்தில் தான் எழுந்தது. இதில் கடைசியாக வந்த சோழர்களில் விஜயால சோழன், அவன் மகன் ஆதித்த சோழன் காலத்தில் சோழ நாடு வீர்த்து எழுந்தது. 

விஜயாலய சோழனுக்கு முந்திய சோழர் வரலாறு தொடர்பு அற்றிருக்கிறது. விஜயாலய சோழன் ஆட்சி கி.பி 848-881 என கணக்கிடப்பட்டிருக்கிறது.

பல்லவர்களின் சிற்றரசாக திகழ்ந்த சோழ நாடு விஜயாலயன் காலத்தில் பல்லவ அரசனாகிய அபராஜிதனுக்கும் பாண்டியர்களுக்கும் எதிராக நடந்த போரில் அவன் மகனாகிய ஆதித்தன் உதவ, பாண்டியர்கள் இரெண்டாம் வரகுண பாண்டியன் தலமையில் தோற்று ஓடினார்கள். இதற்கு நன்றி தெரிவித்து அபராஜிதன் சோழர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து கப்பம் கட்ட வேண்டியதில்லை என்றும் சிலாசன உரிமைகளும் கொடுத்தான். 

மிகவும் நட்புடன் இருந்த ஆதித்தன் அபராஜிதன் நட்பு ஏதோ சில காரணங்களால் உடைந்து ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து போர் செய்து அவர்களை தோற்கடித்து சோழ பேரரசை நிறுவினான்.  யானை மேலிருந்த அபராஜிதனை ஆதித்தன் குதிரை மேலிருந்து பாய்ந்து யானை மேல் ஏறி அவனை கொன்றதாக கன்யா குமாரி கல்வெட்டுக்கள் கூறுகின்றன.பல்லவ இள்வரசி நிருபமாவையும் ஆதித்தன் திருமணம் செய்து கொண்டான். இதன் பின் தான் சோழர்கள் மிக பெருமை பெற்று தென் நாட்டையும் இலங்கையையும் ஆள முற்பட்டனர்.

ஆதித்தன் மகன் முதலாம் பாராந்தகன் அவன் மரணத்திற்கு பின் அரியணை ஏறினான். இவன் தன் தந்தையைப் போல் பல போர்களில் வெற்றி பெற்று நாட்டை விரிவு படுத்தினான். இவன் இறந்ததும் இவன் மகன் கண்டராதித்த சோழன் பட்டம் சூட்டப்பட்டான். இவனுக்கு வீர  நாரணி, செம்பியன் மாதேவி என் இரு மனைவியர் இருந்தனர். இவன் கி.பி.957 இல் இறந்த பின் இவன் மகன் மதுராந்தகன் என்ற உத்தம சோழன் சிறுவனாகையால் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை. இதனால் பாராந்தகனின் மூன்றாம் மகனாய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான். இவனுடைய நான்கு மனைவியர்களில் வைதும்பராயன் மகளான கல்யாணிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனை பாராந்தகன் என்று பெயரிட்டு சுந்தர சோழன் என (மிக அழகாக இவன் இருந்தமையால்)  அழைக்கப் பெற்றான்.

இரெண்டாம் பாராந்தக சோழன் என்னும் சுந்தர சோழன் கி.பி.957-970 வரை ஆட்சி செய்தான். இரெண்டு மனைவியரை மணந்த சுந்தர சோழனுக்கு வானவன் தேவி என்னும் திருக்கோவிலூர் மலையமானாட்டு சிற்றரசன் மகளுக்கு ஆதித்த கரிகாலன், அருள்மொழித் தேவன் என்னும் மகன்களும் குந்தவை என்ற மகளும் பிறந்தனர். ஆதித்த கரிகாலன் பாண்டிய அரசனான வீரபாண்டியனை கொன்றான். அவன் தலையை கொய்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

சுந்தர சோழன் மகன் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான். இவனை கொன்றவர்கள் சோமன், பஞ்சவன் எனப்படும் இரவிதாசன், பிரமாதிராஜன் என்ற பரமேஸ்வரன், தேவதாச கிராமவித்தன் என்ற நான்கு பிராமண சகோதர்கள் என்று தெரிகிறது. இவர்கள் உயர்ந்த பதவி வகித்தவர்கள். இக்கொலையின் காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த கொலைக்குப் பின் சுந்தர சோழன் மனமுடைந்து கி.பி. 969இல் இறந்தான்.

சுந்தர சோழன் மரணத்திற்கு பின் கண்டராதித்த சோழன் மகனாகிய உத்தம சோழன் என்ற மதுராந்தகன் அரசராக முடி சூட்டபட்டான்.
 அருள்மொழித்தேவன் அரசுரிமை கோராமல் தன் சித்தப்பனாகிய மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட விரும்பி ஒப்புதல் அளித்தான்.
ராஜ ராஜ சோழன் கி.பி.985 இல் அரசனாக முடி சூட்டபட்டான்.இவன் முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்ததாக தெரிகிறது. ராஜ ராஜன் ஆட்சி தமிழ் நாட்டின் பொன்னேட்டுகளில் பொரிக்கப்பட்டுள்ளது.

ராஜ ராஜன் என்ற அருள்மொழித் தேவனுக்கு பல மனைவியர் உண்டு. பட்டத்து அரசி உலகமாதேவி. வானவன் தேவி என்ற மனைவியின் மகன் தான் ராஜேந்திர சோழன். ராஜ ராஜனுக்கு இரண்டு மகன்கள். இரெண்டு மகள்கள். மூத்த பெண் மாவடிகள். இரெண்டாம் பெண் குந்தவை. ராஜ ராஜன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்று அறிகிறோம். இளவயதிலேயே தாய் தந்தையை இழந்த அருள்மொழிதேவன் என்ற  ராஜ ராஜன் பாட்டி செம்பியன் மாதேவி, அன்னை குந்தவை ஆகியோரால் வளர்க்கப்பட்டான்.
ராஜ ராஜன் பாண்டிய நாட்டின் மேல் படை எடுத்து அமர புஜங்க பாண்டியனை வென்றடக்கினான். சேரன் பாசுர வர்மனுடன் சண்டையிட்டு சேரர்களின் கப்பல் படையை அழித்தான். சேரர்களின் எஞ்சிய கொல்லம், கொடுங்கல்லூர் இவற்றை ராஜ ராஜன் வென்றான். குடகை ஆண்டு வந்த கொங்கோள்வான் மரபில் வந்தவனை “பணசோகே என்னும் இடத்தில் தோற்கடித்து விரட்டினான். கங்கவாடி, நுளம்பவாடி, கடிகைபாடி ஆகிய நாடுகளை அவன் மகன்  ராஜேந்திரன் போரிட்டு கைப்பற்றினான்.

ராஜேந்திர சோழன் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தனுடன் பொரிட அவன் தோற்று ரோஹணத்திற்கு ஓடிப்போனான். ஆகையால் ஈழத்தை சோழர் படை ஏற்றுக்கொண்டது. அதுவும் சோழ நாட்டுடன் இணைக்கப்பெற்று “மும்முடி சோழ மண்டலம் என் பெயர் பெற்றது. ஈழ மண்டலத்தில்மாதோட்ட நகரில் ராஜ ராஜன் பெயரால் “ராஜராஜேஸ்வரம் என்னும் சிவன் கோயில் கட்டி அதற்கு இயறையிலி வழங்கப்பட்டது.

பொலன்னருவாயில் ராஜ ராஜன் கற்கோவில் கட்டப்பட்டு அதற்கு தன் தாயார் “வானவன் மாதேவி பெயரால் “வானவன் மாதேஸ்வரம் என்று பெயரிடப்பட்டது.

மேலை சாளுக்கியன் இரண்டாம் தைவ்பனின் மகன் சத்தியாசிரயனை வென்ற செய்தி தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டில் “சத்தியாசிரயனை அழித்து எழுந்தருளி வந்து ஸ்ரீபாதபுஷ்பமாக அட்டித் திருவடி தொழுதான் என கூறப்பட்டிருக்கிறது.

கீழை சாளுக்கிய மன்னரில் ஒரு பிரிவினரான சக்தி வர்மனுக்கு ராஜ ராஜன் உதவினான். பமர்ர பிரிவை சேர்ந்த ஜடசோட வீமனை வென்றான். வீமன் கொல்லப்பட்டான்.

 சக்திவர்மனுக்குப்பின் அவன் தம்பி விமலாதித்தன் வேங்கி நாட்டின் அரசனக்கப்பட்டான். அவனுக்கு தன் மகளான குந்தவையை மணம் செய்து கொடுத்தான். விமலாதித்தன் சக்தி வர்மனுக்குப்பின் அரசனாக முடி சூடிக்கொண்டான்.
கோதாவரி, மஹா நதி இவ்வெரெண்டு ஆற்றுக்கும் இடையில் இருந்த கலிங்க நாட்டை ராஜராஜன் மகன் ராஜேந்திரன் வென்றான். இறுதியாக “முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்று அழைக்கப்பட்ட மாலத்தீவினை கடற் படையால் வென்றான்.
ராஜ ராஜன் தஞ்சையில் மிகப்பெரும் கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயரிட்டு அழைத்தான். இது புதிதாக கட்டப்பட்டது அல்லவென்றும்  அப்பர் பெருமானால் பாடப்பட்ட “தஞ்சை குளி குளத்தையே பெரும் கோயிலாக கட்டி தன் பெயரிட்டான் என்றும் சொல்வர். மத வெறி இல்லாமல் நாக பட்டினத்தில் கடாரத்து அரசன் சூளாமணி வர்மன் அவன் மகன் விஜயோத்துங்க வர்மன் ஆகியோர் கட்டிய புத்த விகாரத்திற்கு தன் பெயரான "ராஜ ராஜ பெரும்பள்ளி"  சூட்ட இசவளித்தான். அதற்கு ஆனைமங்கலம் என்ற ஊரை சந்தமாக அளித்தான்.

ராஜ ராஜன் சிவ பக்தன் ஆனாலும் திருமால் கோவில்களுக்கும் தொண்டுகள் செய்து உள்ளான். மணலூர் அருகிலுள்ள  “சமயங்கொண்ட சோழ விண்ணகரம், தலைக்காடு அருகிலுள்ள “இரவி குல மாணிக்க விண்ணகரம் ஆகிய கோயில்களை கட்டி அதற்கு நிவந்தங்களும் அளித்தான்.
தஞ்சை பெரிய கோவில் ராஜ ராஜனின் அரசியல், சமுதாய, கலைப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. நுண்ணிய செய்திகள் முதல் பெரிய செய்திகள் வரை அந்த கோவிலில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.

 இறைவனுக்கு பொன் மலரிட்டு தொழுது அதன் எடையைக்கூட  குறிக்க செய்தான். கோவிலை கட்டிய தச்சன், பிற தச்சர்கள், நாவிதர்கள், என்று பல தொழில் செய்பவர்கள் பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.

 கோயிலுக்கு தொண்டு செய்த கணிகையர்கள் பெயர் கூட அதில் பொரிக்கப்பட்டிருக்கிறது.
நிலத்தை அளந்து கணக்கிட்டதால் “உலகளந்தான் என்ற பட்டமும் பெற்றான். சோழ நாட்டை ஒன்பது வள நாடாக பிரித்தான்



ராஜ ராஜன் உலக சாதனையாளர் வரிசையில் வைக்கப்பட வேண்டியவன்.போர் ஆற்றல், மக்கள் ஆற்றல்,படைப்பு ஆற்றல் என்று எல்லவிதத்திலும் உயர்ந்து விளங்கியவன். மக்கள் ஆட்சியை நிலை நாட்டியவன். கிட்டதட்ட இப்போதய தென் இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவன்.

திரு.கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" என்ற புனையப்பெற்ற நாவலை படித்தபின் தான் எனக்கு சோழர்களைப்பற்றி  படிக்க ஆர்வம் ஏற்பட்டது. அவர் சரித்திரத்தையும் கற்பனையையும் கலந்து எழுதினார். அதில் உண்மையான பாத்திரங்களுடன் கற்பமை பாத்திரங்களும் உலவினர். வந்திய தேவன் ஒரு கதானாயகனாக அதில் வலம் வந்தான். அவன் குந்தவையை காதலித்து மணம் புரிகிறான். அனால் அவன் வாணர் குலத்தைக் சேர்ந்தவனாக் கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஆனால் அவன் வாணர் குலத்தைச் சேர்ந்தவன் அல்லன். ஆழ்வார்க்கடியான் பூங்குழலி, நந்தினி இவர்கள் கதைக்காக புனையப்பட்ட பாத்திரங்கள். ராஜ ராஜன் அவன் மகன் ராஜேந்திரன் இருவரும் ஆற்றிய செயல்கள் மிககும் சிறப்பு பெற்றவை. தமிழனாக பிறந்த யாவரும் பெருமை அடைய வேண்டிய பொக்கிஷங்கள் தான் அவை. வாழ்க அவர்கள் புகழ்.



Comments