எங்கள் குழந்தை பிராயம்




நான் பிறந்தது தமிழ் நாட்டின் திருப்பரங்குன்றத்தில் எங்கள் தாத்தா வீட்டில். அப்போதெல்லாம் டாக்டர் வந்து பிரசவம் பார்க்க மாட்டார். மருத்துவச்சி அல்லது மிட்வைஃப் என்பவர் தான் பார்த்துக்கொள்வார். எங்கள் தாத்தா, அம்மாவின் அப்பா, தேவசம் ஆடிட்டர் ஆகையால் ஒரு ஆண் டாக்டர் கூட வந்து பார்த்து போவாராம். நாங்கள் அண்ணன்கள், அக்கா எல்லோரும் அங்கு தான் பிறந்தோம்.

அந்த காலத்தில் திருவனந்த புரத்தில் இருந்து இரவில் ஒரு பாஸஞ்சர் டிரயின் கிளம்பி சென்னை வரை போகும். அந்த டிரையின் திருச்சி வரை நேராக போய் பின்னர் அங்கிருந்து சிதம்பரம், சீர்காழி என்று சுற்றி மூன்றாம் நாள் காலை சென்னை போகும். ரொம்ப மெதுவாக போகும். பாசஞ்சர் டிரையின். அது திருப்பரங்குன்றத்திற்கு காலை 6 மணிக்கு போய் சேரும். அங்கிருந்து பொடி நடையாக எங்கள் தாத்தா வீட்டிற்கு போய் சேருவோம். 

எங்கள் ஊர் போல் அங்கு குடி தண்ணீர்  கழிப்பறை வசதிகள் இல்லாத ஊர் அது, அக்காலத்தில். குடி தண்ணீர்  எங்கோ சன்னாசி கிணரில் இருந்து வேலைக்காரி கொண்டு வந்து ஒற்றுவாள். மற்ற உபயோகங்களுக்கு உப்பு தண்ணீர் எங்கிருந்தோ அவள் தான் கொண்டு வருவாள். நாங்கள் எல்லாம் ரோடில் தான் எல்லாம். ஏராளம் பண்ணிகள் அழுக்கை எல்லாம் சாப்பிட்டு விடும்.

பெரியவர்களுக்காக சிரிதாக ஒரு கழிப்பறை மறைவாக கட்டியிருந்தார்கள். ஒரு பெரிய கண்மாய் தூரத்தில் இருந்தது. 

அங்கு எங்கள் சித்தி பசங்களுடன்  நாங்கள் விளையாடி பொழுது போக்குவோம். சில சமயங்களில் அவர்களுடன் அவர்கள் பள்ளிக்கு போய் உட்கார்ந்து படிப்போம். கிட்டதட்ட ஒரு மாதம் அங்கிருந்து விட்டு திரும்பி விடுவோம். சில சமயங்களில் எங்கள் 'கசின்கள்' திருவனந்தபுரம் வருவார்கள்.

எங்கள் வீடு மிக பெரிதாக இருக்கும். பெரிய ஹால்கள், வராந்தாக்கள், மாடி, பின் புறம் பெரிய தோட்டம் என்று இருக்கும். எங்கள் அம்மா எங்களை வெளியே விட மாட்டார்கள். பள்ளிக்கு போய் வந்தபின் வீட்டில் தான் விளையாட வேண்டும்.

சின்ன வயதில் அப்பா சட்டை, நிக்கர் இவற்றை மிக பெரிதாக தைக்கச்சொல்வார். டெய்லரும் தைத்துக்கொண்டு வருவான். பாவாடை போல் பெரிதாக அரைக்கால் நிக்கரும் தொள தொளவென்று இருக்கும் சட்டையும்,  போட்டுக்கொண்டு  ஸ்கூள் போகவேண்டும். மற்ற பிள்ளைகள் கேலி செய்வார்கள்.

தலை முடி கூட ஒட்ட வெட்டி அசிங்கமாக இருக்கும். சீக்கிரமாக் வளரக்கூடாதாம். ஒரு பார்பர் வீட்டிலேயே வந்து வெட்டுவார். வயதானவர். உட்க்காரவைத்து தன் இரு முட்டாலும் தலயை அழுத்திப்பிடித்துக்கொண்டு கத்திரி, சீப்பு இதன் கூட பழைய கிறிஸ்து காலத்து 'மெஷின்' வைத்து முடி வெட்டுவார். அந்த "மிஷன்" முடி வெட்டாது, முடியை அப்படியே புடுங்கும். வலி தாங்க முடியாது. பின்னாட்களில் நானும் என் அண்ணனும் அந்த ஆளிடம் முடி வெட்ட மறுத்து விட்டோம்.

நாய் வளர்க்க வேண்டும் என்று ரொம்ப நாட்களாக எங்களுக்கு ஆர்வம். எங்களுக்கு ஒரு தென்னம் தோப்பு சிரிது தூரத்தில் இருந்தது. அதனை ஒரு காவலாளி காத்து வந்தார். அவரிடம் கருப்பான குள்ளமான் ஒரு பெண் நாய் இருந்தது. அது குட்டி போட்டதும் அதில் ஒரு ஆண் நாய் எங்கள் வீட்டில் வந்து சேர்ந்தது. அதை மிக அன்பாக நாங்கள் வளர்த்தோம். நாங்கள் மாமிசம் சாப்பிட மாட்டோம் ஆனால் அந்த நாய்க்காக தனியாக  'கறி' வாங்கி வெளியில் வைத்து சமைத்து அதற்கு கொடுக்கப்பட்டது. அந்த் 'கறி' சமைக்கப்படும்போது எங்களை ( என்னையும் என் அண்ணனையும் ) அந்த பக்கம் அந்த நாய், (டைகர் என்று பெயரிடப்பட்டது,) வர விடாது. குலைத்து குலைத்து கடிக்க வரும்.

சில சமயங்களில் அதற்கு கொட்டை பாக்கை வாங்கி பாலில் உரைத்து கொடுக்கப்படும். அப்படி பாலை குடித்ததும் நாயை தூர தோட்டத்தில் கொண்டு போய் கட்டிவிடுவோம். அன்று முழுவதும் அங்கேயே அதற்கு பேதி ஆகி வயறு சுத்தமாகி விடும்.

ஒரு நாள் நான் ஒரு கயரை வைத்து விளையாடி கொண்டிருந்தபோது டைகர் வந்து அந்த கயற்றை கட்த்து இழுத்தது. பல்லில் கயறு மாட்டிக்கொண்டு எடுக்க வராமல் திண்டாடியது. இறுதியில் பல்லே வெளியில் வந்து விட்டது.

அதற்கு பின் அதற்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது. தோட்டத்தின் காவலாளி வந்து அதனை கொண்டு போனான். சில நாட்களில் அது இறந்து போயிற்று.

என் அப்பா அதை நான் தான் கொன்றேன் என்று கூறுவார்.

எங்கள் தந்தையார் ரொம்ப கடவுள் நம்பிக்கையும் பழைமைவாதியும் ஆவார். இத்தனைக்கும் அவர் வக்கீலுக்கு படித்து வக்கீலாக தொழில் செய்தவர். பல மொழி கற்றவர். யோகா, ஹோமியோபதி, வேதம், உபனிஷத் என்று எதையும் விடவில்லை. அப்படிய்ம் இந்த மாதிரி திவசம், அம்மாவாசை, பாட்டியம்மை, ராகு காலம், சகுனம் என்று எல்லா மூட நம்பிக்கைகளும் அவருக்கு உண்டு.

 அவரின் தந்தையார் தாயார் இறந்ததால் அவர் அவர்களுக்கு திதி, திவசம் என்று அவர்கள் இறந்த நாட்களில் அவர்களுக்கு திதி கொடுப்பார். அன்று காலையில் இருந்தே வீட்டில் தடபுடலாக எல்லாமே அவசர் கதியில் இயங்கும். அதி காலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும். காஃபி மட்டும் தான் குடிக்க தருவார்கள். வாத்தியார் (அய்யர்) வருகையை எதிர்பார்த்து இருக்க வேண்டும். அன்று இரவில் அப்பா விரதம் இருப்பார். அன்று இரவு அவர் சாதம் சாப்பிட மாட்டார். அவருக்கு டிஃபன் தான். டிஃபன் சாப்பிடுவது எப்படி விரதம் ஆகும்? தெரியவில்லை.

தெவசத்திற்க்காக ஏற்படுகள் நடந்து கொண்டிருக்கும். கோமெயம்( மாட்டு மூத்திரம்), சாணி, மாவிலைகள் இவைகளை நாங்கள் கொண்டு வந்து தரவேண்டும். கோலம் போட்டு பாத்திரங்கள் துலக்கி, கெண்டியில் தண்ணீர் நிரப்பி, வாழை இலையில் அரிசி, தயிர் என்று பல விஷ்ங்கள் நிரப்பி வைத்திருக்கும். அய்யர் வந்து வேறு பல பொருட்களை நிரப்பி அரிசி மாவு, தேன், எண்னை என பல பொருட்கலை கொண்டு பிண்டம் உருட்டி வைத்து மந்திரம் சொல்லி புரோஹிதம் செய்வார்.

எங்களுக்கு பசி உசிர் போகும். ரொம்ப மெதுவாக் எல்லா விஷயங்களும் நடக்கும். அன்று எங்கள் அம்மா தான் சமைக்கணம். மற்ற நாட்களி ஒரு மொட்டை மாமி சமைப்பார். அவர் பெயர் பள்ளத்தெரு பார்வதி அம்மாள். அவர்கள் கணவர் சிறு வயதிலேயே இறந்து விட்டதால் அவர் மொட்டை போட்டுக்கொண்டார்.பள்ளத்தெரு அவர் இருந்த தேரு, அது திருவனந்தபுரத்து கோயில் கோட்டைக்குள் இருந்தது. அவருக்கு ஒரு பெண் இருந்ததாக நினைவு. என் குழந்தை பருவத்திலேயே அவர் எங்கள் வீட்டில் வேலை செய்ததாகவும் என்னை  கூட பார்த்துகொண்டதாகவும் அம்மா சொல்வார்கள். வேறொரு மாமி கூட சமையல் வேலை செய்தாள் ஆனால் அவர் பெயர் நினைவில் இல்லை.

திவசம் அன்று சமையல் தடபுடலாக இருக்கும். வடை, பாயசம், வத்தல், ரசம், சாம்பார்,  பப்படம்,   பச்சடி,    எள்ளுரண்டை   என்று   பிரமாதமாக      இருக்கும். பிரச்சனை   என்னவென்றால்   சாப்பாடு  கிடைக்க    ரெண்டு மணி ஆகிவிடும். அதுவும் அய்யர் வர   லேட்   ஆனால்   இன்னம் சமயம்  (லேட்)   ஆகும். என்ன தின்னலாம் என்று இருக்கும். ஒன்றும் கிடைக்காது. சமையல் முடிந்து, பூஜை எல்லாம்  முடிந்து,  சாமிக்கு  படைத்து  விட்டு  பின்  காக்கா தின்ற பின்    தான் சாப்பிட முடியும்.


ஏன் காக்காவிற்கு கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் ரொம்ப புதிராக இருந்தது. பின்னர் தான் காக்கா பிதுர்க்கள் என்றும் அவற்றிற்கு கொடுத்தால் பழைய முன்னோர்களுக்கு கொடுத்து போல் ஆகும் என்றும் பழைய தாத்தா, பாட்டி, மற்ற உறவினர்கள் காக்கா உருவத்தில் வருவார்கள் என்றும் கூறுவார்கள்.  ஆனால் திவசம் அன்று மட்டும் காக்கா உருவத்தில் வருபவர்கள் மற்ற நாளில் ஏதேனும் பொருளை கொத்தினால் ஏன் கோபம் கொண்டு விரட்டினோம் என்று  கேட்டால பதில் வராது.


சில நேரங்களில் எங்கள் அக்கா வெல்லத்தில் திருவிய தேங்காய் பூவை விரவி தின்ன கொடுப்பாள். பிரமாதமாக இருக்கும்.

ரொம்ப சாவதனமாக எல்லாம் நடக்கும். பிண்டம் எல்லாம் பிடித்து வைத்து கையில் ஏதோ மோதிரம் போல் ஏதோ கட்டிக்கொண்டு பிண்டம் பிடித்து வைப்பார்கள். பின் அதை காக்கவிற்கு கொடுக்கவேண்டும்.

என்றைக்கும் அங்கும் இங்கும் பறந்து அலைந்து கொண்டிருக்கும் காக்காக்கள் அன்று மட்டும் எங்கு போய் தொலையுமோ தெரியவில்லை. ரொம்ப நேரம் கத்தினால் ஏதோ ஒன்று வரும். அதுவும் ரொப பிகு பண்ணிக்கொண்டு வேண்டா பெறுப்பாக தின்ன ஆரம்பிக்கும். "ஆகா'' என்று சொல்லிக்கொண்டு உள்ளே ஓடி எங்கள் தட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட காத்திருப்போம்.

அப்பா வந்து இலை முன் உட்கார்ந்து தண்ணீர் தெளித்து சாப்பிட்ட பின் தான் நாங்கள் சாப்பிட முடியும்.

அன்று இரவு அப்பா சாதம் சாப்பிட மாட்டார். அவருக்கு மணக்க மணக்க தோசை வார்த்து அம்மா கொடுப்பார்கள். (அது என்னவோ தெரியவில்லை எங்க அம்மா செய்யும் தோசையின் மணமே தனி. மொத்து மொத்து என்று வெள்ளையாக தடிமனாக, புசு புசுவென்றிருக்கும்.) எங்களுக்கு தோசை கிடையாது. காரணம் தந்தை இல்லாதவர்கள் தான் டிஃபன் சாப்பிடலாமாம். ஆகையால் கத்தி ஆர்பாட்டம் பண்ணிலால் பாதி தோசை கிடைக்கும். நல்ல எண்ணையில் குளிக்கும் மிளகாய்பொடியுடன் அகா என்ன சுவை !! இப்போதும் நினைத்தால் நாவில் தண்ணீர் ஊறுகிறது.

மந்திரங்கள் எல்லாமே கடவுளை புகழ்வதாகத்தான் தெரிகிறது. நான் கஷ்டப்பட்டு கொஞ்சம் சமஸ்கிருதம் படித்தேன் அதிலிருந்து இது தெரியவந்தது.


எனக்கு இந்த திதி திவசம் இவற்றில் நம்பிக்கை இல்லாததால் நான் அவற்றை செய்வதில்லை. அது எப்போது வரும் என்று கூட தெரியாது.

Comments