அரசன் குமணன் கதை

நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது குமணன் என்ற பாடம் இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் நல்ல ஞாபகம் உள்ளது. 

குமணன் என்பவன் ஒரு அரசன். ஒரு நாட்டை ஆண்டு வந்தான். கல்வி கேள்விகளில் தேர்ந்த குமனன் புலவர்களையும் கவிஞ்ர்களையும்   ஆதரித்து பாராட்டி அவர்களுக்கு  நல்ல வெகுமதிகள் அளித்து வந்தான்.

இதனால் அரசாங்க கஜானா காலி ஆகத் தொடங்கியது. அரசனின் தம்பி ஆகிய இளங்குமணனை இது மிகவும் பாதித்தது. அவன் அரசனை ஒழித்துக்கட்ட நினைத்தான். இதற்காக ஒரு நாள் குமணனின் அரண்மனையை தன் ஆட்களுடன் முற்றுகை இட்டு அரண்மனையை கைப்பற்றிக் கொண்டான். அரசனையும் பிடித்து கொல்ல நினைத்தான்.

ஆனால் அதற்கு முன்பே இந்த தம்பியின் சூழ்ச்சியை அறிந்த குமணன் அங்கிருந்து தப்பி காட்டிற்கு சென்று விட்டான். அங்கேயே தவம் இயற்றி கனி வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான்.

தம்பி இளங்குமணன், அண்ணன் குமணனின் தலையை கொய்து கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொன் என்று பறைசாற்றினான்.

ஒரு நாள் இந்த நிகழ்ச்சிகளை அறியாத ஒரு புலவர் அரசன் குமணனை தேடி வந்தார். அரசன் இல்லாததால் காவலர்கள் அவரை உள்ளே விடவில்லை. புலவரும் விடாமல் குமணனைத்தேடி காட்டிற்கு சென்றார். மிக் கடினமாக் தேடி அவர் குமணனை கண்டு பிடித்து தன் வறுமை நிலயை சொல்லி தனக்கு ஏதேனும் பரிசுகள் அளிக்கக் கோறினார்.

மிகவும் மனம் வருந்திய குமணன் அவரிடம்

"அந்த நாள் வந்திலை அருங்கவி புலவோய்
இந்த நாள் வந்து நொந்தலை அடைந்தாய்,
தலை தனை  கொண்டு போய் தம்பி கை கொடுத்து
விலை தனை வாங்கி உன் வறுமை நோய்களை"  என்றான்.

 ( அந்த நாளில் நான் அரசனாக இருந்த சமயத்தில் வராமல் இப்போது வந்து வருத்தப்படுகிறாய். என் தலயை கொய்து என் தம்பியிடம் கொண்டு போய் கொடுத்தால் அதற்கு அவன் விலை பேசி உள்ளான். அதை வாங்கி உன் வறுமையை போக்கிகொள்).

இதற்கு ஒத்துக்கொள்ளாத புலவர் ஒரு சிற்பியிடம் சென்று அரசன் குமணன் தலை போல் ஒரு தலையை செய்து அதை இரத்தத்தில் தொய்த்து  எடுத்துக்கொண்டு இளங்குமணனிடம்  கொண்டு போய் " மன்னா இது தான் குமணன் தலை, வாங்கிக்கொண்டு பரிசளியுங்கள்" என்று சொல்லி கொடுத்தார்.

அந்த தலயைப்பார்த்த இளங்குமணனுக்கு பாசம் பீரிட்டு வந்தது துக்கம் பொங்கி வந்தது. கீழே விழுந்து அலறி ஆர்ப்பாட்டம் செய்தான். பின் புலவரைப்பார்த்து "அடே புலவா என் அண்ணனைக்கொன்று விட்டாயா, என்ன காரியம் செய்தாய், நான் என் அண்ணனை இனி எப்போது காண்பேன். பாவியாகி விட்டேனே " என்று கதறினான்.

இதைப்பார்த்த புலவர் " அரசே குமணன் சாக வில்லை. இது அவரின் தலை போல் செய்யப்பட்ட சிலை"  என்று சொன்னார். இதைக்கேட்ட இளங்குமணன் அவரையும் அழைத்துக்கொண்டு குமணன் இருந்த இடத்திற்கு போய் அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு திரும்பவும் அரசாள அழைத்து வந்தான்.

புலவருக்கும் தகுந்த சன்மானங்கள் கிடைத்தன.


Comments