சங்கமித்திரை

நான் பள்ளியில் படிக்கும்போது சங்கமித்திரை என்ற Non Detail (கதை) எங்களுக்கு இருந்தது. சங்கமித்திரை சக்கிரவர்த்தி அசோகரின் மகள்.

மௌரிய  அரசரான அசோக சக்கிரவர்த்தி, மன்னர் பிந்துசாரரின் மகன். அவர் அரியணை ஏறிய பின் தன் நாட்டை பெரிதாக்க  யுத்த வெறி கொண்டு பல நாடுகளுடன் போர் செய்து வெற்றி கொண்டார்.

கலிங்க நாட்டிற்கு கப்பம் கேட்டு அவர் அனுப்பிய தூதனிடம் கலிங்க அரசர் கப்பம் கட்ட மறுக்க, அசோகர் கலிங்கத்தின் மேல் போர் தொடுத்தார். அசோகரின் தாத்தா சந்திரகுப்த விக்கிரமாதித்தரின் காலத்தில் இருந்தே மௌரியர்கள் கலிங்கத்தின் மீது போர் தொடுத்து தோற்று பின் வாங்கி உள்ளனர்.

ஆகையால் அசோகர் கலிங்கத்தின் மீது போர் செய்து அதனை தன் கீழ் கொண்டு வர துடித்தார்.

போர் மீண்டது. இரு படைகளும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இரண்டு பக்கமும் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் மாண்டனர். குருதி ஆறாக ஓடியது. முடிவில் அசோகர் கலிங்கத்தை வெற்றி
கொண்டார்.

யுத்த பூமியை காண வந்த அசோகருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படை வீரர்கள், யானைகள், குதிரைகள் எல்லாம் இறந்து பிண வாடை வீசியது. கழுகுகள், நரிகள், ஓநாய்கள் பிணங்களை கடித்து தின்றன. கணவனை இழந்த மனவியர், மகன்களை இழந்த தாய் தந்தைகள், உறவினர்கள் கூட்டம் அங்கும் இங்கும் தங்கள் வீழ்ந்த வீரனை தேடி அலைந்தனர். காயம் பட்டவர்கள் அலறும் கூக்குரல் எங்கும் கேட்டது. எங்கும் அவலக்கூச்சல், குருதி ஆறு ஓடுகிறது. 

அசோகருக்கு மிகுந்த அதிர்ச்சி, வருத்தம், கவலை கொண்டு கதறினார். "என் ஒருவனால் தானே இந்த அழிவெல்லாம். இன்னாட்டை கைப்பற்றி என்ன செய்யப்போகிறேன்" என்று  அலறினார். 

இந்த போரினால் அவர் நிம்மதி குலைந்தது. போர் மேல்  வெறுப்பு ஏற்ப்பட்டது "இனிமேல் நான் போர் செய்யப் போவதில்லை. புத்த மதத்தில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன்" என சூளுரைத்து புத்த மதத்தில் சேர்ந்தார்.

புத்த மதத்தை பரப்ப தன் ஆட்களை உலகெங்கிலும் அனுப்பினார். அசோகரின் பிள்ளைகள்  இளவரசன் மஹிந்திரன், சங்கமித்திரை. அவருக்கும் அவர் மனைவி விதிஷ தேவிக்கும் பிறந்தவர்கள். அசோகர் இவர்களை இலங்கைக்கு அனுப்ப எண்ணினார்.

சங்கமித்திரை அசோகரின் செல்ல பெண் ஆக வளர்ந்தவள். அவளின் 14 வயதில் அவளுக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அந்த திருமணத்தின் பயனாக் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சுமனன் என்ற பெயருடைய அவன் சங்கமித்திரை இலங்கைக்கு போனபோது கூட சென்றான்.

சங்கமித்திரை தனது பதினெட்டாவது வயதில் புத்தமதத்தில் சேர்ந்து மதத்தை பரப்ப தொடங்கினாள். பாடலிபுத்திரத்தில் வாழ்ந்து வந்த சங்கமித்திரை 'ஆயுபால'  என்ற குருவிடம் கல்வி கற்றவள்.

அசோகர் தன் மகன் மஹிந்திராவையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பி அங்கு புத்த மதத்தை பரப்ப சொன்னார். ஒரு பெரும் படை சூழ பல கப்பல்களில் புத்த சன்யாசிகளுடன் மஹிந்திரவும் சங்கமித்திரையும் இலங்கைக்கு வந்து சேர்ந்தனர்.மஹிந்திர முதலில் வந்தான். பின்னாட்களில் தான் சங்கமித்திரை வந்தாள்.   சங்கமித்திரை புத்த கயாவில் இருந்த போதி மரத்தின் ஒரு கிளயை இலங்கைக்கு கொண்டு வந்து அங்கு நட்டு வைத்தாள். அவர்களை அங்கு ஆண்டிருந்த இலங்கை மன்னன் வரவேற்று புத்த மதைத்தை தழுவி பல புத்த விஹாரங்களை கட்டி புத்த மதத்தை தழைக்க செய்தான் சங்கமித்திரையும் அவள் தமையனும் கூட அவனுக்கு உதவினர்.

இலங்கையில் தங்கி புத்த மதத்தை எல்லா இடங்களுக்கும் சென்று பரப்பி தழைக்க செய்தாள் சங்கமித்திரை. அவளின் முயற்சியால் புத்த மதம் அந் நாட்டின் மதமாகியது. 

தன் எழுபத்தொன்பது வயதில் அனுராதபுரத்தில்  மரணமடைந்த சங்கமித்திரைக்கு அன்னாட்டின் மக்கள் பிரியா விடை கொடுத்தனர். அவளின் உடல் எரிவூட்டபட்டது. அந்த இடத்தில் ஒரு ஸ்தூபம் எழுப்பபட்டது.

Comments