சில பழைய பால்ய நிகழ்வுகள்

சின்ன குழந்தையாக இருக்கும்போது நடந்த சில நிகழ்ச்சிகள இன்னும் நினைவில் நிற்கின்றன. 

ஒன்றாம் வகுப்பில் என்னை கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டார்கள். யாரையும் தெரியாது. நிறைய நீண்ட பெஞ்சுகளில் பையன்களும் பெண்களும் தனி தனியாக அமர்ந்திருந்தனர். நான் ஒரு மூலையில் கடைசியில் அமர்ந்திருந்தேன்.  ரொம்ப 'அர்ஜென்டாக' ஒண்ணுக்கு போக வேண்டும் போல இருந்தது. என்ன செய்யவேண்டும், எங்கு போகவேண்டும் என்று தெரியாமல் போட்டிருந்த பைஜாமாவிலே போய் விட்டேன். யாரும் கண்டு கொள்ளவில்லை.

நான்காம் வகுப்பு படிக்கும்போது  நான் எப்போதும் போல் பின் வரிசையில் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் அய்யப்பன் என்ற பையன் அமர்ந்திருந்தான். எங்கள் முன் வரிசையில் பெண்கள் (மாணவிகள்) அமர்ந்திருந்தனர். 

திடீரென ஒரு பெண் "டீச்சர் என் ஜடையை இவங்கள் யாரோ பிடித்து இழுத்தனர்" என்று எங்கள் இருவரையும் காட்டினாள். நிச்சயமாக் நான் இழுக்கவில்லை. ஆனால் டீச்சர் பென்ச் மேல் ஏறு  என்றதும் நான் ஏறி நின்று விட்டேன். ஆனால் கடைசி வரை அய்யப்பன் ஏறவில்லை. "நான் இழுக்க வில்லை டீச்சர்" என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ரொம்ப தைரியமான பையன். நிறைய பொய் சொல்வான். அவன் தந்தை பெண்கள் ஆஸ்பத்திரி வாசலில் ஆரெஞ்சு விற்பார். எப்போது ஒரே சட்டை, நிக்கர் அணிவான். அது ரொம்ப பெரிதாக இருக்கும். அய்யப்பனை நான் நான்காம் வகுப்பிற்கு பின் பார்த்ததில்லை. நான் வேறு பள்ளிக்கு போய்விட்டேன். 

அப்போதெல்லாம் நாங்கள் ஒரு விளையாட்டு  விலையாடுவோம், பாட்டு கிளாஸில்.ஒரு ஒல்லியான பாட்டு டீச்சர் கடன் எழவேன்று பாட்டு சொல்லிகொடுப்பாள். கூட பெண்கள் டான்ஸ் ஆடுவார்கள். அதில் சிலருக்கு ரொம்ப நாட்டம் இருந்தது ஏனென்றால் ஆல் இந்தியா ரேடியோவில் போய் ஆடி பாடினால் ஏதோ பரிசு கிடைக்கும்.

 பெண்கள் பெண் டீச்சரோடு ஏதொ பாட்டு பாடி டான்ஸ் ஆடுவார்கள். ரொம்ப போர் அடிக்கும். நாங்கள் பின்னால் இருக்கும் பென்சில் எட்டு பேர்கள் உட்கார்ந்து இருப்போம். டீச்சர் பாடிக்கொண்டிருக்கும்போது நாங்கள்  "நெருக்கு மச்சான் நெருக்கு" விளையாடுவோம். அதாவது ஒரு பக்கத்தில் இருக்கும் மாணவர்கள் அங்கிருந்து மறு பக்கத்தை நோக்கி உட்கார்ந்து கொண்டே தள்ளுவார்கள். இதை மறு பக்க மாணவர்கள் தடுத்து மற்றவர்கள் பக்கம் தள்ளவேண்டும். இப்படி இரு பக்கம் நெருக்கி கொண்டு தள்ளி யார் பக்கம் கீழே விழுகிறார்களோ அவர்கள் தோற்றதாக  எடுத்துக்கொள்ளப்படும். டீச்சர் பார்த்து விட்டால் எல்லோருக்கும் அடி கிடைக்கும்.

எங்களை (என்னையும் என் அண்ணனையும்) வீட்டு வேலைக்காரி தான் பள்ளிக்கு அழைத்து செல்வாள். அவள் பேர் பப்பை. அவள் ஊமையாகையால் பப்பை என அழைப்பர். அவள் உண்மை பெயர் இப்போது ஞாபகம் இல்லை. ஒரு நாள் எங்களை அழைத்து  வரும்போது ஒரு சைக்கிள்காரன் என்னை இடித்து விட்டான். நான் கீழே விழுந்து அடிபட்டது. பப்பை ஒரு கையால் அந்த சைக்கிளை பிடித்துக்கொண்டு மறு கையால் என்னை பிடித்து அவனிடம் சண்டை போட்டாள். யாருக்கும் அவள் சொல்லியது புரியவில்லை. பின் அவனையயும் அவன் சைக்கிளையும் பிடித்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தாள். பின்னாலே ரொம்ப பேர்கள் இந்த சச்சரவை காணா கூடி பின்னாலே வந்தனர். இது அங்கு சகஜம்.

எங்கள் வீடு திருவனந்தபுரம் சாலை பஜாரில் இருந்தது. மிக பெரிய வீடு. பக்கத்து கதவு வழி எல்லோரும் உள்ளே போனோம். பப்பை என் அம்மாவிடம் என்னை ஒப்படைத்து விட்டு அவனை காண்பித்து சைகையில் எல்லாவற்றையும் சொன்னாள். என் அக்கா, அம்மா இருவருக்கும் ரொம்ப கோபம் வந்தது. என் அப்பா பிரபலமான வக்கீல் ஆகையால் அம்மா அவர் வரும் வரை அந்த சைக்கிள் காரனை அங்கேயே இருக்குமாறு சொல்லி விட்டார்கள். சைக்கிள் காரனை போலீசில் கொடுப்பப்போவதாக மிரட்ட. அவன் காலில் விழுந்து மன்னிப்பு  கேட்டான். இதில் பப்பை தான் அவனை விடக்கூடாது என்று கத்தினாள், சைகையில்.  ரொம்ப கூட்டம் கூடியதால் கடைசியில் அவனை கண்டித்து அனுப்பி வைத்தார் என் அம்மா.

அவர்கள் எல்லோரும் போன பின் பப்பை நான் எப்படி இனி வெளியில் போவேன் என்று வெட்கத்தோடு அமர்ந்திருந்தாள். பாவம்.கொஞ்ச நாட்களில் அவள் காணாமல் போய் விட்டாள்.

ரொம்ப நாட்கள் பின் அவளை யாரோ மதுரைக்கு அழைத்து சென்று அங்கேயே கல்யாணம் செய்து கொடுத்து விட்டதாக கேள்விப்பட்டோம். பல வருடங்களுக்கு பின் அவள் ஒர் பத்து வயது பெண்ணோடு எங்களை பார்க்க வந்தாள். அது அவள் மகளாம். மதுரை பக்கம் எங்கோ இருப்பதாக சொன்னாள். அந்த பெண் நன்றாக தமிழ் பேசியது. அவள் காட்டிய சைகைகளை அழகாக தமிழில் கூறியது.

நான் பள்ளியில் படிக்கும்  போது சைக்கிள் கற்றுக்கொண்டேன். அதுவும் வீட்டிற்கு தெரியாமல். எனக்கு மதியம் இட்லி சாப்பிட ரெண்டு அணா கொடுப்பார்கள். அதில் நாலு இட்டிலி வாங்கலாம். நான் அந்த நாலு அணாவை சைக்கிளை ஒரு மணி நேரம் வாடகைக்கு எடுத்து  என் நண்பன் துணையோடு கற்றுக்கொள்ள தொடங்கினேன். சைக்கிள் கற்று கொள்வது மிக கடினம். டமால் டமால் என்று விழ வேண்டும். நண்பன் கூட சைக்கிளை பிடித்துக்கொண்டு ஓடி வரவேண்டும். பல நாட்கள் ஆன பின் தன் சுமாராக சைக்கிள் கற்றுக்கொண்டேன்.

 ராமச்சந்திரன் என்ற நண்பன் தான் உதவினான். ராமச்சந்திரன் என்னை விட பெரியவன். தோற்று தோற்று என் கூட வந்து படித்தான். அதுவும் ஏழாம் வகுப்பில் தோற்ற பின்  டிவிஎஸ் இல் வேலைக்கு போய் விட்டான்.

என்னுடன் ராமசாமி என்ற நண்பன்  10ஆம் வகுப்பிலும் SSLC  யிலும் படித்தான். SSLC யில் ஃபயில் ஆகி விட்டான். ஆனால் விடா முய்ற்சியால் தமிழ் B.A படித்து பாஸ் பண்ணிவிட்டான். எப்போது ? நான் ஒரு வருடம் B.Sc, ஐந்து வருடம் இஞ்சினீரிங் படித்து முடித்து ஒரு வருடம் வேலை செய்த பின்.

இதில் வேடிக்கை என்ன வென்றால் ராமசாமியின் தம்பிகள் மாணிக்கம், ராஜகோபால் கூட என்னோடு படித்தவர்கள்.  ஆகையால் நான் அவர்கள் மூவருடன் படித்தவன் என்றால் ராமசாமியின் விடா முயற்சியை பாராட்ட வேண்டாமா?

ராமசாமி பொற்கொல்லர் வகுப்பை சேர்ந்தவன். அவர்களுக்கு சொந்தமான ஒரு நகை கடை திருவனந்தபுரத்தில் இருந்தது.

ராமசாமியை எனக்கு எப்படி தெரியும் என்றால். என்னை விட சீனியரான அவன் என்னை ஒரு நாள் பிடித்து தமிழ் புத்தகங்கள் வாடகைக்கு வேண்டுமா என்று கேட்டான். எனக்கு கதை புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். அவனிடம் வாடகைக்கு புத்த்கங்கள் படிப்பேன். ஒரு புத்தகம் நாலு அணா. படிப்படியாக அந்த புத்தகங்களை நானே வாங்கி வைத்துக்கொண்டேன். என்னிடம் இருந்து மற்றவர்கள் சும்மா படித்தார்கள்.

Comments