கண்ணப்ப நாயனார். ( வேடன் கண்ணப்பன்).


கண்ணப்பன் என்ற வேடன் வேடர்கள் தலைவரின் மகன். காட்டில் இருந்து திரிந்து விலங்குகளை வேட்டையாடி அவற்றின் மாமிசங்களை உண்டு வாழ்ந்து வந்தான். இப்படி இருக்கும் போது ஒரு நாள் காட்டில் ஒரு கோயிலைக் காணுகிறான் கண்ணப்பன். அதனுள் செருப்புக்காலோடு  நுழைந்து பார்த்தால் ஒரு அழகிய சிவ லிங்கம், ஒரு விளக்கு, பூக்கள் என ரம்யமாக இருக்கிறது. காட்டில் இருக்கும் அந்தத பாழடைந்த கோயிலுக்கு யாரோ விளக்கேற்றி பூஜை செய்து வருகிறார்கள். கண்ணப்பனுக்கு அந்த சிவ லிங்கத்தை பார்த்தவுடன் அதன் மேல் காதல், பக்தி உண்டாகிறது. அது போன்ற லிங்கத்தையோ, இல்லை கடவுள் சிலையையோ அவன் அதற்கு முன் கண்டதில்லை. அப்படியே லிங்கத்தை கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்கிறான். பாடுகிறான், குதிக்கிறான், தன்னை மறக்கிறான்.

லிங்கத்திற்கு மேல் இருக்கும் பூவை எல்லாம் தள்ளி காலாலே அந்த இடத்தை சுத்தம் செய்கிறான். வெளியில் ஓடி அருகில் இருந்த சுனையில் இருந்து பலமுறை தண்ணீரை தன் வாயில் அடக்கி கொண்டு வந்து லிங்கத்தின் தலையில் உமிழ்ந்து அதனை கழுவுகிறான். காட்டில் இருக்கும் பூக்களை கொண்டு வந்து லிங்கத்தின் மேல் தூவுகிறான்.ஒரு மானைக்கொன்று அதன் இறைச்சியை சிவனுக்கு கொண்டு வந்து வைக்கிறான். தின்ன சொல்கிறான். அதனடியில் படுத்துக்கொண்டு “அய்யனே என்று அலறுகிறான்.
பொழுது சாய்கிறது. கூட வந்த தோழன் அவனை “வா போகலாம் என்றழைக்கிறான். ஆனால் கண்ணப்பனுக்கு போக மனமில்லை.  நண்பன் திரும்ப போய் வேடர் தலைவனிடம் இப்படி கண்ணப்பன் ஒரு கோவிலில் ஒரு லிங்கத்தோடு இருக்கிறான். வர மறுக்கிறான் என சொல்ல தலைவன் இன்னும் சிலரை அனுப்பி அவனை வரச்சொல்ல பணிகிறான்.

நண்பன் வறுப்புறுத்த பிரிய மனமில்லாமல் கண்ணப்பன் தன் குடிலுக்கு போகிறான்.

இரவில் அவனுக்கு உறக்கம் வரவில்லை சிவ பெருமான் நினைவாகவே இருக்கிறான்.
பொழுது விடிந்ததும் கோயிலின் பூசாரியான சிவாச்சரியர் வருகிறார். அங்கு இருக்கும் கோலத்தைக்கண்டு துணுக்குருகிறார். யார் இந்த அனாச்சரத்தைச் செய்தது என எண்ணுகிறார். அந்த அசிங்கங்களை காலால் தள்ளி தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து கொண்டு வந்த பூக்களை லிங்கத்தின்  மேல் தூவி அர்ச்சனை செய்து விட்டு வீடு திரும்புகிறார்.

சிறிது நேரத்தில் அங்கு ஓடோடி கண்ணப்பன் வருகிறான். அங்கு இருந்த பூக்களையும் மற்ற பொருட்களையும் காலால் பெருக்கி தள்ளி தான் கொண்டு வந்த மான் கறி, மற்ற பழங்களை சிவனுக்கு படைத்து உண்ண சொல்கிறான். இவன் அன்பை கண்ட சிவன் இவன் பக்தியை சோதிக்க தன் ஒரு கண்ணில் ரத்தம் வரவழைக்கிறார்.

இதனைக்கண்ட கண்ணப்பன் அலறி அடித்து துடித்து என்ன செய்வது என்று முழிக்கிறான். பின் செருப்புக் காலை எடுத்து சிவ லிங்கத்தின் தலையில் வைத்து ஒரு கையால் தன் அம்பை எடுத்து அதனால் தன் ஒரு கண்ணை எடுத்து சிவ பெருமான் கண்ணில் வைத்தான். ரத்தம் வருவது நின்றது. இப்போது மற்ற கண்ணில் ரத்தம் வழிய துவங்கியது. இதைககண்ட கண்ணப்பன் தன் இன்னொரு கண்ணையும் எடுத்து சிவபெருமானின் கண்ணில் வைக்க கண்ணை நோண்ட போகும் போது சிவ பெருமான் லிங்கத்தில் இருந்து எழுந்து “கண்ணப்பா, உன் பக்திக்கு மெச்சினோம். இன்மேல் நீ என்னுடனே இருப்பாய் என்று சொல்லி தன்னோடு ஐக்கியமாக்கிக் கொண்டார். இதிலிருந்து தான் வேடன் கண்ணப்பன் கண்ணப்ப நாயனார் ஆனார்.

Comments