நந்தனார் சரித்திரம்

நந்தனார் சரித்திரம்


இந்த கதை நான் மிக சிறிய வயதில் என் தந்தையாரிடம் கேட்ட கதை. நிலமுடைய பண்ணையார்களிடம் ஏராளம் ஜாதியால் தாழ்த்தப்பட்ட அடிமைகள் வேலை செய்து வந்தார்கள். அவர்களில் ஒருவரது கதை தான் இது.

பல வருடங்களுக்கு முன்னால் சிதம்பரத்துக்கு பக்கமுள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பிராமணர் ஏராளமான நிலங்களுடன் வாழ்ந்து வந்தார். அவரது நிலத்தில் ஏராளமான அடிமைகள் வேலை செய்து வந்தனர். அவர்களுக்கு கூலி எதுவும் கிடையாது பண்ணையார் கொடுக்கும்  நெல்லைத்தான் அரிசியாக்கி விற்று அதற்கு தகுந்த பொருட்களை வாங்கித்தான் சாப்பிடவேண்டும். இவர்கள் பொதுவாக தாழ்த்தப்பட்ட 'புலையர்' இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை தொட கூடாது, ஆனால் அவர்கள் உற்பத்தி பண்ணும் அரிசி, காய் கறிகளை, பழங்களை உண்ணலாம். அதற்கு தீட்டு கிடையாது. இவர்கள் எல்லோரும் கிராமத்தை விட்டு தூர சேரிகளில் வாழ்ந்து வந்தனர்.

இவர்களில் நந்தன் என்றவர் ஒரு வேதியர் பண்ணையாரிடம் வேலை செய்து வந்தார். நந்தனுக்கு சிவ பெருமான் பேரில் மிகுந்த பக்தி, அன்பு, ஆசை. அவருக்கு சிதம்பரம் சென்று சிவ பெருமானை காண வேண்டும் என்ற விருப்பம் வெகு நாட்களாக இருந்தது. ஒரு நாள் அவர் பண்ணையாரிடம் சென்று "அய்யனே, எனக்கு சில நாட்கள் விடுப்பு வேண்டும். சிதம்பரம் சென்று 'சிவ பெருமானைக்' கண்டு வருகிறேன்" என்று வருந்தி கேட்டார்.

வேதியருக்கு மிகுந்த கோபம் வந்தது. "மாடு தின்னும் உனக்கு எதற்கு கடவுளை காண வேண்டும்? போய் உன் வேலைகளை செய்" என்று கத்தினார்.

நந்தன், கூனி குருகி நின்று "அய்யனே, நான் போய் வந்து அந்த வேலைகளை செய்கிறேன், இப்போது அனுமதி கொடுங்கள்' என்று இரைஞ்சி திரும்ப, திரும்பக் கேட்டார்.

வேதியர் யோசித்தார் "சரி நீ ஒன்று செய். இன்றே உழுது, நாற்று நட்டு, களை பரித்து, பயிர் வளர்த்து, அறுவடை செய்து, நாளைக்காலை இங்கு என் வீட்டிற்கு கொண்டு வந்து கொடு. அப்படி செய்தால் நீ சிதம்பரத்திற்கு போகலாம்" என்றார்.

மிக்க சோகத்தில் திரும்ப தன் குடிசைக்கு திரும்பிய நந்தனுக்கு அழுகை வந்தது. தீரத்துயரத்தில் மூழ்கிய அவர் சிவ பெருமானை நினைத்து அழுது "அய்யனே உன்னை காண எனக்கு கொடுப்பினை இல்லையே. என்ன செய்வேன்" என கதறினார். தூக்கம் வரவில்லை. மெதுவாக காலை புலர்ந்தது. திரும்பவும் வேதியரைக் கண்டு சிதமபரம் செல்ல வேண்டலாம் என் நினைத்து நந்தன் வேதியரைக் காண வந்தார்.

வேதியர் தூங்கி கொண்டிருக்கும்போது  கனவில் சிவ பெருமான் வந்து " என் பக்தனை நீ துன்புறுத்தாதே. அவன் என்னை பார்க்க வருகிறான். அவனை அனுமதித்து விடு. உன் வேலைகளை அவன் செய்து முடித்து விட்டான்" என்றார். அவர் எழுந்து வெளியே வந்து பார்த்தால் வெளியே நெற் குவியல்கள். திகைத்து, மலைத்து போனார்.வீட்டின் முன் நெல் கும்பாராமாக மலை போல் நிற்கிறது, குவியல் குவியலாக. தாங்க முடியாத அதிசியத்தில் வேதியர் திகைத்து நிற்க, நந்தன் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் ஆச்சரியத்தில் மலைத்து நின்றார்.

வேதியர் நந்தனாரின் பக்தியை அறிந்தார். அவர் காலில் விழுந்தார் " நந்தா நீ சிவ பக்தன், உன்னை நம்பாமல் படு மோசம் போனென், நான் பித்தன்" என்று சொல்லி வணங்கி அவர் சிதம்பரம் போக அனுமதித்தார்.

ஆசையும் பக்தியும் சேர நந்தன் ஓட்டமும் நடையுமாக சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலை அடைந்தார். அவர் தீண்டபடாத ஜாதியை சேர்ந்தவர் ஆகையால் தூரத்தில் இருந்து தான் சாமி கும்பிட வேண்டும். அப்படி ஆசையும், பக்தியும் பொங்க அவர் சிவ பெருமானை பார்க்க முயன்றார். ஆனால் நந்தி மறைத்தது.

நந்தனார் "சற்றே விலகி இரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்குது" என்றார். நந்தியும் சற்று விலக சிவனை ஆசை தீர கண்டு மனமகிழ்ந்தார் நந்தனார். அப்போது சிவ பெருமான் இருக்கையை விட்டு வந்து நந்தனாரை தன்னோடு அணைத்து அப்படியே ஒளி மயமாக மறைந்தார். இதன் பின் நந்தனாரையும் கடவுளாக வழிபட்டனர் மக்கள்.



Comments