அம்மா செய்யும் அவியல்



சாப்பாட்டில் அவியல் எல்லோருக்கும் பிடித்த ஒரு ஐட்டம். மிகவும் ருசியாகவும் நல்ல சத்தானதும் ஏராளமான காய் கறிகள் சேர்த்தும் செய்யப்படும் 'தொட்டுகொள்ளும்' கறி. 

ஆனால் சென்னையிலும் தமிழ் நாட்டிலும் கிடைக்கும் / செய்யப்படும் அவியல் வட கேரளா ஸ்டைலில் இருக்கிறது. காய்கறிகள் எல்லாம் குழைந்து, வெள்ளை அல்லது லேசான மஞ்சை நிறத்தில் இருக்கிறது. இது தயிர் சேர்த்து செய்யப்படுகிறது.

எங்கள் அம்மா திருவனந்தபுரம் ஸ்டைலில் அவியல் செய்வார்கள். இதில் காய்கறிகள் (சேனை, வாழைக்காய்,கத்திரிக்காய், முருங்கக்காய், மாங்காய் (புளிப்புக்காக), கொத்தவரங்காய், பலாக்கொட்டை) என்று பல இதில் அடங்கும். சில சமயம் சீவக்கிழங்கு ( சென்னையில் கூர்க்க கிழங்கு என்று அழைக்கப்படுகிறது ) கூட சேர்க்கப்படும். இவை அனைத்தும் நீட்ட வாக்கில் நறுக்கப்பட்டு மஞ்சள் பொடி சேர்த்து முக்கால்வாசி வேகவைத்துக்கொள்ளப்படும். காய்கள் ரொம்ப வேக கூடாது. பின்னர் வற்றல் மிளகாய், ஜீரகம், தேங்காய், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் வைத்து  அரைத்து வேகவைத்த காய்கறிகளில் கொட்டி, சிறிது புளிதண்ணீர் செர்த்து கொதிக்கவைத்து, தாளித்து இறக்கினால் ஆகா அற்புதமான அவியல் தயார்.

 இது கொஞ்சம் குழம்பு போல் இருக்கும். ஆகையால் குழம்பு பகுதியை சோற்றில் ஊத்திக்கொண்டு காய்கறியை தொட்டுக்கொண்டு திவ்யமாக சாப்பிடலாம். குறிப்பாக வத்தல் குழம்பு / புளிகுழம்பு, சாம்பார், தயிர்,  ரசத்துடன் மிக  நன்றாக இருக்கும்.

எனக்கு அவியல் ரொம்ப பிடிக்கும்.

Comments