ராஜேந்திர சோழனும் அவன் பெற்ற வெற்றிகளும்.

ராஜேந்திர சோழன்.

திரு.கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" என்ற புனையப்பெற்ற சரித்திர நாவலை படித்தபின் தான் எனக்கு சோழர்களைப்பற்றி  படிக்க, தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. ராஜ ராஜன் அவன் மகன் ராஜேந்திரன் இருவரும் ஆற்றிய செயல்கள் மிகவும் சிறப்புப் பெற்றவை. தமிழனாக பிறந்த யாவரும் பெருமை அடைய வேண்டிய பொக்கிஷங்கள் தான் அவை. வாழ்க அவர்கள் புகழ். 

மறைந்த நாவல் ஆசிரியர் அகிலன் ராஜேந்திரனைப் பற்றி ஒரு நெடுங்கதை புனைந்திருந்தார். அது வேங்கையின் மைந்தன். கல்கியில் தொடர் கதையாக வந்தது. ஆனால் இதன் நாயகன் ஒரு சோழ நாட்டு படைத்தலைவன். இதுவும் ஒரு கற்பனை கதை தான்.

இந்திய சாம்ராஜியத்திலேயே மிக சக்தி வாய்ந்த, மிகப் பெரிய படை பலம் கொண்ட அரசர்களில் ராஜ ராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திர சோழனும் தான் முதன்மை வகிக்கிறார்கள். மிகப்பெரிய யானைப்படை, காலாட் படை, கப்பல் படை இவற்றை வைத்து பல அரசர்களை வென்று மிக பெரிய நாடாக சோழ நாட்டை பெரிது பண்ணினார்கள்.

ராஜ ராஜன் கி.பி.985 ஆம் ஆண்டு பிறந்தான், இவன் முப்பத்தி ஒன்று ஆண்டுகள் ஆட்சி செய்ததாக தெரிகிறது. அதாவது கி.பி. 1012 இல் இவனது மரணம் சம்பவித்தது. ராஜ ராஜனுக்கு பின் அவன் மகன் ராஜேந்திர சோழன் முடிசூடிக்கொண்டான்.இவன் தன் பாட்டனார் சுந்தர சோழனைப்போல் எழில் மிக்கவனாகவும் மிகுந்த ஆற்றல் மிக்கவனாகவும் போர் தந்திரங்களில் சிறப்பு பெற்றவனாகவும் விளங்கினான். ராஜ ராஜ சோழனுக்கும் மாதேவி வனாவன் தேவிக்கும் திருவாதிரை நாளில் பிறந்தவன் ராஜேந்திரன்.
ராஜேந்திரனின் மனைவிகளில் முக்கியமானவர்கள் முக்கோக்கிழானடிகள், அரிந்தவன் மாதேவி, வீரமாதேவி, திரிபுவன மாதேவி என்பவர். வீரமாதேவி அவன் இறந்தபோது உடன் கட்டை ஏறினாளாம். ராஜெந்திரனுக்கு ராஜாதி ராஜன், ரஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகிய ஆண் மக்களும் அருள்மொழி நங்கை, அம்மங்கை தேவி என்ற பெண் மக்களும் உண்டு.

ராஜேந்திரனின் வெற்றிகளை திருவாலங்காட்டு செப்பேடுகள் மற்றும் அரசனின் மெய்கீர்த்திகளும் கூறுகின்றன. மேலை சாளுக்கியரால் ஆளப்பெட்ட “இடைத்துறை நாடு கிருஷ்ணா, துங்கபத்திரை ஆறுகளின் இடயில் இருப்பது. இதைத்தான் ராஜேந்திரன் முதலில் வென்றான். பின்னர் மேலை சாளுக்கியரின் பகுதியை வென்றான்.அடுத்தது “குல்பர்கா என்று இப்போது சொல்லப்படும் “கொள்ளிப்பாக்கை, மானிய  கேதம் ( இப்போது மால்கேட்) ஆகிய நாடுகள் வெல்லப்பட்டது.கி.பி.1017 இல் ராஜேந்திரனின் படை இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தனுக்கு எதிராக சண்டை செய்து ரோஹணத்தை கைப்பற்றியது. ஈழ அரசனும் அரசியும் அணிந்திருந்த மணி முடியயும், பாண்டிய மன்னன் ராஜ சிம்மன் அங்கு விட்டுச்சென்ற மணி முடியையும், இந்திரனின் ஹாரத்தையும் கைப்பற்றிக்கொண்டு சோழனாடு திரும்பியது சோழர் படை. ஈழ நாட்டில் சோழர் கட்டிட பாணியில் கட்டப்பட்ட சிவன், திருமால் கோவில்கள் இப்போதும் உள்ளன.

கி.பி.1018 ராஜேந்திரன் சேர நாட்டின் மேல் படை எடுத்து சேர மன்னர்கள் அணிந்திருந்த மணிமுடி, மாலை இவற்றையும் அவர்களின் தீவுக்கூட்டங்களையும் கைப்பற்றினான். சேர, பாண்டிய நாடுகள் ராஜேந்திரன் காலத்தில் சோழர் வசம் வந்து விட்டது. மதுரையில் அரண்மனை கட்டி தன் மகனை சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டி நாட்டையும் சேர நாட்டையும் ஆட்சி செய்து வர செய்தான். மதுரையில் கி.பி 1018 இல் சோழ பாண்டியன் அரசப்படி நிகராளியாக முடி சூடப்பட்டதை மன்னார்கோவில் கல்வெட்டு கூறுகிறது.

ராஜேந்திரனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டு “முயங்கி என்ற ஊரில் மேலை சாளுக்கிய மன்னனான ஜெயசிங்கனை வென்று “இரட்டப்பாடி ஏழரை நாட்டைக் கைப்பற்றியதை கூறிகிறது.

ராஜேந்திரனின் முக்கிய படை எடுப்பு கங்கை படை எடுப்பே. இதில் அனேகமாக கி.பி.1023 ஆண்டிற்கு முன் நடைப்பெற்றிருக்க வேண்டும். ராஜேந்திரனின் மெய் கீர்த்தி, திருவாலங்காட்டு செப்பேடுகள், கன்யா குமாரி கல்வெட்டுகள், ஒட்டக்கூத்தரின் மூவர் உல, ஜெயங்கொண்டாரின் கலிங்கத்து பரணி இவை வட  நாட்டு போரையும் படை எடுப்பையும் எடுத்துரைக்கின்றன.

ராஜேந்திரனின் படை எடுப்பு வேங்கி நாட்டிலிருந்து தொடங்கியது. சக்கர கோட்ட மண்டலத்திற்குள் சோழர் படை நுழைந்தபோது அதனை அதன் மன்னர் தடுக்க போர் மூண்டது. அது வெல்லப்பட்டது. வத்ச அரசின் (இப்போதய பஸ்தார்) மதுரா மண்டலம் சோழர்களுக்கு பணிந்தது.(இப்போதய UP  state’s Mthura).  அதன் பின் அதன் பிரதேசங்களான “நாமனை கோணமும் “பஞ்சப்பள்ளியும் பிடிக்கப்பட்டன.

பின்னர் தென் கோசல  நாடான ஒட்டர தேசத்தையும் மஹா நதியின் கரையில்  அமைந்த கோசல நாட்டையும் சோழர் வென்றனர். சோழர்படை ஒட்டார தேசத்து மன்னனை கொன்று அவன் மகனிடம் திறை கொண்டது. பின்னர் அவர்கள் வங்காளத்தின் மிதுனாபுரி மாவட்டத்தின் தென் பகுதியையும், தண்டபுத்தியையும் பிடித்தனர். தர்மபாலன் என்ற மன்னன் தோற்றான். அடுத்து  தக்கணலாட (ஹூக்ளி, ஹௌரா மாவட்டங்கள்) மன்னன் ரணசூரன் தோற்றான். வங்க அரசன் கோவிந்தசந்தனும் தோற்றான். வங்க மானிலத்தை ஆண்ட மகிபாலன் (பாலர் மரபினன். இவன் ஆட்சி காசி வரை பரவி இருந்தது) தோற்கடிக்கப்பட்டான்.

தோற்ற மன்னர்களின் தலைகளில் கங்கை நீர் நிரப்பிய குடங்களுடன் வந்த சோழர் படைத் தலைவனை ராஜேந்திரன் கோதாவரை ஆற்றங்கறையில் சந்தித்து வரவேற்று நாடு திரும்பினான். இந்த கங்கை படை எடுப்பின் போது கங்கை ஆற்றைக்கடக்க நூற்றுக்கணக்கான யானைகளை வரிசையாக நிறுத்தி அதன் மேல் பாலம் அமைத்து ஆற்றைக் கடந்த்து சோழர் படை என திருவாலங்காட்டு செப்பேடுகள் சொல்கின்றன.

இவ்வெற்றியின் நினைவாக வட நாட்டிலிருந்து கொண்டு வந்த வினாயகர் சிலை கும்பகோண திரு நாகேசுவரரின் கோயிலில் வைக்கப்பட்டு “கங்கை வினாயகர் என்றழைக்கப்பட்ட்து. இது ராஜேந்திரனின் திக் விஜயம் ஆகும்.

இப்படை எடுப்பில் ஈடுபட்ட ஒரு படைத்தலைவன் “கருனாடகன் என்பவன் மேற்கு வங்கத்திலேயே தங்கி விட்டான். அவன் மரபில் வந்த “சாமந்த சேனன்என்பவனே கி.பி. 1050 இல் வங்க சேனர் ( சேனர்) மரபினை தோற்றுவித்தான் என டாக்டர். R.T.Banerji  கூறுகிறார். மிதிலையை ஆண்ட கருனாடகரும் தென்னாட்டவர் என்பது அறிஞர்கள் கருத்தாம்.

ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டப் பெயரை பெற்றான். அவன் புதிதாக அமைத்த நகரம் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயரிடப்பட்டது. அது “கங்கை கொண்ட சோழீசஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த வெற்றிக்காக ‘சோழ கங்கை என்னும் பெரிய ஏரி வெட்டப்பட்டது.

மிகப் பெரிய, மிகச் சிறந்த கடற் படை சோழர்களிடம் இருந்தது. இதைக் கொண்டு தான் ராஜ ராஜனும் அவன் மகன் ராஜேந்திரனும் பல நாடுகளை படை எடுத்து அவற்றில் தன் கொடியை நாட்ட முடிந்தது.

சோழ அரசும் கடார அரசும் ராஜேந்திரன் ஆட்சியில் நட்பு கொண்டிருந்தன என்று ஆனை மங்கல செப்பேடுகள் கூறுகின்றன. கடாரம் என்பது பர்மா நாட்டில் உள்ள “பெகு என்ற பகுதி ஆக இருக்கலாம் என்றும் கி.பி. 1025-1027 இல் பெகு நாட்டை சொழர்கள் வெற்றி கொண்டிருக்கலாம் என்றும் அங்கு காணும் இரெண்டு வெற்றி தூண்கள் ராஜேந்திரன் வென்றதின் அடையாளமாக இருக்கலாம் என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் சோழர் வரலாறுகளில் கடாரம் என்பது மலயா தீவின் “கெடா என்ற பகுதி என்று கூறப்படுகிறது. கடாரம் வென்றபின் ராஜேந்திரன் சிறீ விஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம் முதலான பகுதிகளை கைப் பற்றியது. ஆகையால் இவை அனைத்தும் மலேயா பகுதிகளாய் இருப்பதால் மலயாவின் “கெடா தான் கடாரம் என்று நீலகண்ட சாஸ்த்ரியாரும், சதாசிவ பண்டாரத்தாரும் கூறுகிறார்கள்.

Dr.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் சுமத்திராவின் வட கிழக்கு பகுதியில் உள்ள “கெர்த்தி என்னும் இடமே கடாரம் என்று கூறுகிறார். திரு கே.கே. பிள்ளை பினாங்கை அடுத்துள்ள “கேடா என்னுமிடத்தையே கடாரம் என்று கூறுகிறார்.

கடல் நடுவிலுள்ள சங்கிராம விஜயோதுங்க வர்மனை ராஜேந்திரன் தன் கடற் படையால் தோற்கடித்து அவன் பட்டத்து யனையயும், பொருளையும் கைப்பற்றினான என்று அவனது மெய் கீர்த்தி கூறுகிறது. ராஜேந்திரன் இப்படை எடுப்பால் சிறீ விஜயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம்,இலங்காசோகம், தமாலிங்கம், இலாமுரிதேசம், நாக்காவரம் ஆகிய இடங்களை கைப்பற்றினான். சிறீவிஜயம் என்பதுபது இப்போதய சுமத்ரா. “பண்ணை சுமத்ரா தீவின் கிழக்கு கரையில் உள்ளது. மாயிருடிங்கம் மலேயாவின் நடுவில் இருக்கும் பகுதி. கெடா விற்கு தெற்கே இருந்தது இலங்காசோகம். இதனை சீனர்கள் “இல்ங்க்யா செங்கியா: என்றழைத்தனர். நிக்கபார் தீவு தான் நக்காவரம்.

ராஜேந்திரன் தந்தையைப்போல் கடவுள் பால் மிகவும் பக்தி உடையவன். தஞ்சையிலிருந்து தலை நகரை கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். இவ்வூரின் நடுவில் “கங்கை கொண்ட சோழேஸ்வரம் என்னும் கோவிலை கட்டினான். இதன் அமைப்பு தஞ்சை பேருடையார் கோவிலைப்போலவே இருக்கும் ஆனால் அதை விட அழகு மிக்கது. ராஜேந்திரன் 35 ஆண்டுகள் சோழ பேரரசை ஆண்டான். கி.பி.1040 இல் தன்னுடைய 83ஆம் வயதில் பிரம்ம தேசம் என்னும் ஊரில் உயிர் நீத்தான்.


Comments