தேக்கடி ராஜா- இந்த கதை ஆனந்த விகடனில் ரொம்ப வருடங்கள் முன்னால் வந்தது. அதன் சுருக்கம் தான் இது



தேக்கடி ராஜா

நான் மிக சிறு பையனாக இருக்கும்போது (பள்ளியில் படிக்கும்போது) ஆனந்த விகடனில் வந்த கதை தேக்கடி ராஜா. நல்ல அழகான நெடும் தொடர். இரண்டு சின்ன குழந்தைகளையும் அவர்கள் பின்னால் வயது வந்தபின் சந்திக்கும்போதும் நடந்ததாக எழுதப்பட்ட கதை. இது உண்மையான கதையா இல்லை புனையப்பட்ட கதையா என்று தெரியவில்லை ஏனெனில் இந்த கதைப்படி இந்த கதையின் கடைசி நிகழ்வுகளுக்கு அப்பால் தேக்கடி ஒரு பாதுகாக்கப்பட்ட காடாக அப்போதய திருவிதாங்கூர் மன்னரால் அறிவிக்கபட்டதாக முடிவடைகிறது. 

இது பல வாரங்களாக வந்த தொடர் கதை. இப்போது என் நினைவில் இருப்பதை வைத்து நான் எழுதி உள்ளேன். நான் இக்கதையை படித்தபோது  பள்ளியில் படித்ததுக் கொண்டிருந்தேன். சுமார் 40 வருடங்களுக்கு முன் வந்த கதை. எழுதியது யார் என்று தெரியவில்லை. இது சுருக்கப்பட்டது ஏனென்றால் எனக்கு கற்பனை திறன் கதை எழுதும், அதுவும் பிறர் எழுதிய கதையை, எழுதும் அளவு இல்லை. பொறுமையும் கிடையாது.

இப்போது கதை.

இந்த கதை ஒருவர் சொல்வதைப்போல் எழுதப்பட்டிருக்கும்.

சென்னையில் வேலை செய்து வந்த எனக்கு தேக்கடியில் ஃபாரஸ்ட் ஆஃபீசராக வேலை செய்து வந்த என் உற்ற நண்பன் ராஜேந்திரன் ஒரு கடிதம் எழுதி இருந்தான். “இந்த ஜனவரி மாதம் நீ அவசியம் தேக்கடிக்கு வந்து என்னோடு ஒரு வாரம் தங்கவேண்டும். உனக்கு மிக ஆச்சரியமான ஒரு விஷயம் காட்டுகிறேன். அதுவும் இந்த மாதம் 15 தேதி நீ இங்கு இருக்கவேண்டும். என்று எழுதி இருந்தான்.

உடனடியாக லீவ் கிடைக்காவிட்டாலும் ஏதோ பொய் சொல்லி லீவ் வாங்கிகொண்டு தேக்கடி போய் சேர்ந்தேன். நண்பன் கோட்டயம் வந்து ஆஃபீஸ் வானில் அழைத்து சென்றான். மதிய உணவு முடிந்ததும் நான் அவனிடம் “என்ன விசெஷம். அவசரமாக வர சொன்னாயே" என்றேன்.

அவன் “பொறு இரவில் காட்டுகிறேன் என்றான். பொறுமை இழந்து இரவுக்காக காத்திருந்தேன். இரவில் உணவு உட்கொண்டவுடன் திரும்பவும் கேட்டேன். “அவன் நீ தூங்கு பின்னால் எழுப்புகிறேன் என்றான். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. நடு இரவு இருக்கும் யாரோ என்னை எழுப்புவதை உணர்ந்தேன். நண்பன் தான் என்னை உலுக்கி எழுப்பிகொண்டிருந்தான்.

"சட்டையை மாட்டிக்கொண்டு புறப்படு உடனே" என்றான். சட்டையை மாட்டிக்கொண்டு அவனுடன் புறப்பட்டேன். இருவரும் ஒரு டார்ச் லைட்டுடன் காட்டிற்குள் புறப்பட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக மேடாக இடத்தில் ஏறிக்கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நண்பன் என் கையப்பிடித்து “அங்கே பார் என்றான்.

அங்கு பார்த்த காட்சி என்னை நிலைகுலைய செய்து விட்டது. தலையில் ரோமங்கள் எழுந்து நிற்க, உடம்பு கிடு, கிடு என ஆட்டம் கண்டு விட்டது. தூரத்தில் இடிந்து சிதலமாகி பாழடைந்து கிடந்த ஒரு கட்டிடத்தின் சுவர்களின் இடையில் ஒரு உருவம் ஒரு பெரிய விளக்கை எடுத்து மேலும் கீழுமாக சுற்றிகொண்டிருந்தது. ஏதோ பூஜை செய்து கொண்டிருந்தது  போல் இருந்தது. அதனை சுற்றிப் பெரிய பெரிய கரும் சுவர்கள் அசைந்து கொண்டிருந்தன. நன்றாக பார்த்தபோது தான் அவைகள் சுவர்கள் இல்லை என்றும் யானைகள் என்றும் புரிந்தது. அந்த உருவம் ஏதோ பூஜை செய்வதைப்போல் இருந்தது. பூஜை முடிந்ததும் கடைசியில் அந்த யானைகள் எல்லாம் குனிந்து வணங்கி சத்தமாக பிளிரின. அதன் பின் அவை கலைந்து செல்ல அந்த உருவம் கடைசியாக திரும்பி நடந்து வந்தது. மங்கிய நிலவி ஒளியில் பார்த்தபோது அந்த உருவம் ;ஃபாரஸ்ட் கார்ட் “கண்ணன் என்று தெரிந்தது. ஏதொ கேட்க நினைத்த என்னை பேசாமல் இருக்க ராஜேந்திரன் சைகை காட்ட நானும் வாயை மூடிக்கொண்டு அவன் பின்னால் அறைக்கு வந்து சேந்தேன். "இப்போது எதுவும் கேட்காதே. தூங்கு நாளை சொல்கிறேன்" என்று கூறி நண்பன் தூங்கப்போனான். கண்ட காட்சி  நினைவில் இருந்ததால் தூக்கம் வர நேரமாக, எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. 

அடுத்த நாள் ராஜேந்திரன் எனக்கு சொன்ன கதை இது. கண்ணனிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி வாங்கிய  கதையாம் இது. முதலில் எதுவும் சொல்ல மறுத்த கண்ணன் பின்னால் தயங்கி தயங்கி சொன்ன கதை.

தேக்கடியில் அங்கு ‘ஃபாரஸ்ட் கார்ட் ஆக வேலை செய்பவர் பொன்னைய்யா. (பழைய பெயர் மறந்து விட்டது ஆகையால் புது பெயர். இதே போல் மறந்த பழைய பெயர்களுக்கு புது பெயர் இட்டிருக்கிறேன். கண்டு கொள்ளாதீர்கள்.) வயதான ஃபாரஸ்ட் கார்ட். பொன்னையா தேக்கடி ஏரியில் போட் ஓட்டும் வேலையையும் செய்து வந்தார். இவர் மகன் கண்ணன். சிறு பையன். தந்தைக்கு உதவியாக அங்கிருக்கும் ஃபாரஸ்ட் ஆஃபீசருக்கு உதவியாக பள்ளிகூடம் போகாத நேரத்தில் வேலை செய்கிறான். 

ஒரு நாள் கண்ணன் புதிதாக ஃபாரஸ்ட் ஆஃபீஸர் வீட்டில் (ஆஃபீசர் காட்டேஜில்) ஒரு வான் வந்தது கண்டு ஓடி வருகிறான். வண்டியில் இருந்து ஒரு அழகான, வண்ண பாவாடை உடுத்திய ஒரு சிறு பெண் இறங்குகிறாள். அவள் கண்ணனை தன் பெரிய விழிகளால் ஆச்சரியமாக பார்க்கிறாள். கண்ணன் தன் தந்தை பின்னால் போய் ஒளிந்து அவளை பார்க்கிறான். பொன்னையா அவனை கையை பிடித்து இழுத்து ஆஃபீசரிடம் “அய்யா இது என் பையன் கண்ணன். இந்த காடு முழுதும் அவனுக்கு அத்துப்படி. உங்களுக்கு என்ன வேலை வேண்டுமானாலும் அவனிடம் கொடுங்க, நல்லா செய்வான் என்றார். 

அவனை ஃபாரஸ்ட் ஆஃபீசர் அழைத்து “டேய் கண்ணா இது என் பெண் நளினி. அவளுக்கு நீ தான் காட்டில் எல்லா இடத்தையும் காட்ட வேண்டும். அவளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அந்த பெண்ணிடம் “நளினி இது கண்ணன், பொன்னையாவின் மகன். நல்ல சுறுசுறுப்பான பையன். உன்னிடம் ஓடி விளையாட, உனக்கு வேண்டியதை செய்ய அவனை நீ சேர்த்துக்கொள்ளலாம், உனக்கு காட்டையும் மற்ற இடங்களையையும் சுற்றி காட்டுவான்  என்றார். அந்த பெண் அவனைப்பார்த்து மெல்ல சிரித்தது.

இப்படியாக கண்னனும் நளினியும் நண்பர்கள் ஆயினர். இதன்பின் கதை கண்ணன் சொல்கிறார்.

நானும் நளினியும் இணைபிரியா நண்பர்கள் ஆனோம். அவர்கள் வீட்டில் எனக்கு எப்போதுபோனாலும் வரவேற்பு இருந்தது. அவர்களின் சின்ன சின்ன வேலைகள், தேவைகள் இவற்றை நான் பூர்த்தி செய்ததால் என்னை அவர்களுக்கும் பிடித்துப்போயிற்று. பல நேரங்களில் நான் அங்கு தான் சாப்பிடுவேன். பள்ளி  நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் நளினியை பூச்செடிகள், மரங்கள், ஏரிகள், காட்டின் வேறு சில பகுதிகள் என பல பகுதிகளை நளினிக்கு சுற்றிக்காட்டி அவளுக்கு வேடிக்கைகள் மூலம் காட்டைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றை சொல்லிக்கொடுத்தேன். நளினிக்கு யானை என்றால் கொள்ளை இஷ்டம். என்னிடம் ஒரு யானையை பிடித்துக்கொடு என்று அடிக்கடி சொல்லி வந்தாள். 

ஒரு நாள் என் தாயார் தந்தைக்கு சாப்பாடு கொடுத்து அனுப்பினாள் என்னிடம். நளினியும் என்னுடன் வர விரும்பியதால் அவளையும் அழைத்துக்கொண்டு போனேன். காட்டுக்குள் அவரை தேடி போகும் போது என்னையும் அறியாமல் மிகுந்த தூரம் வந்து விட்டேன். திடீரென ஒரு வளைவில் திரும்பினால் ஒரு ஒற்றையானை நின்று கொண்டிருந்தது. ஒற்றை யானைகள் ஆண் யானைகள். தனியே வெறியுடன் திரிந்து கொண்டிருக்கும். ரொம்ப ஆபத்தானவை. நான் நளினியின் கையைப்பிடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். 

அது எங்களை பார்த்து விட்டு துரத்த ஆரம்பித்தது. என் தந்தையார் சொன்னது நினைவில் வந்தது. “யானையோ இல்லை எந்த மிருகமோ துரத்தினால் காற்றின் எதிராக ஓடவேண்டும் அப்போது தான் நமது மணம் அந்த மிருகத்துக்கு போய் சேராது. யானை மணம் கொண்டு தான் நம்மை கண்டு பிடிக்கும். அதன் கண் பார்வை அவ்வளவு கூர்மை இல்லை என்று. தவிர மேடான இடத்தை நோக்கி ஓட வேண்டும் அப்போது தான் யானையால் நம்மை தொடர முடியாது. ஆகையால் நளினியின் கையை பிடித்து கொண்டு மேல் நொக்கி ஓட ஆரம்பித்தேன். கொஞ்சம் தூரம் ஓடின பின் திரும்பி பார்த்தால் யானை தூர வந்து கொண்டிருந்தது. நான் அருகில் கிடந்த யானையின் சாணத்தை எடுத்து என் மேலும் நளினியின் மேலும் தடவிக்கொண்டு ஒரு பாறையின் மறைவில் அமர்ந்து கொண்டோம். யானை அருகில் வந்தது ஆனால் எங்களை கண்டு கொள்ளவில்லை. யானையின் சாண மணம் அதற்கு பழகி போனதால் திரும்பி போய்விட்டது. 

கொஞ்ச நேரம் பார்த்து விட்டு எழுந்து   நோக்கினேன். இருட்ட ஆரம்பித்தது விட்டது. மழையும் வரும் போல் இருந்தது. நளினிக்கு பசி வந்து விட்டது அப்படியும் அவள் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்தாள். அங்கும் இங்கும் பார்த்து கொண்டிருந்தபோது அங்குள்ள பாறையில் வெள்ளையாக நிறைய படிந்திருந்ததை கண்டேன். அதை கொஞ்சம் உடைத்து முகர்ந்து பார்த்தேன். நல்ல மணமாகத்தான் இருந்தது. வாயில் போட்டபோது இனிப்பாக இருந்தது. அப்போது என் தந்தையார் சொன்னது நினைவிற்கு வந்தது. குட்டி ஈன்ற காட்டு பசுக்கள் அதிகமாக சுரந்த பாலை இப்படி பாறைகளில் அழுத்தி வெளியேற்றும் என்று. அந்த பால் உறைந்து கட்டியாக இருந்தது. அது எங்களுக்கு இப்போது உணவாகியது. இருவரும் அதை சுவைத்து உண்டோம். இதனுடன் காட்டு நாவல் பழங்கள் சிறிது கொண்டு வந்தேன். இவை எங்களுக்கு உணவாகியது. இரவாகியதால் அப்படியே ஒரு மரத்தில் ஏறி இரு பரந்த கிளையில் நளினியை சாய்ந்து உட்காரவைத்து என் கையில் இருந்த துண்டால் கிளையோடு சேர்த்து கட்டி வைத்தேன். தூங்கும்போது கீழே விழாமல் இருக்க. நான் கொஞ்சம் மேல ஏறி வாட்டமாக சாய்ந்து கொண்டு தூக்கம் வராமல் இருக்க மெதுவாக பாடிக்கொண்டிருந்தேன். ஒரு வழியாக தூக்கம் வராமல் இரவைக்கழித்தேன். பாவம் நளினி தான் பஞ்சணையில் தூங்கும் குழந்தை மர உச்சியில் தூங்க நேர்ந்தது. காலையில் எழுந்து இரவு மழையில் சேர்ந்திருந்த மழை தண்ணீரில் முகம் கழுவி நடக்க ஆரம்பித்தோம். நளினி சோர்வாக இருந்தாள். 

அப்போது தான் அதை கவனித்தேன். ஒரு தாய் யானை தன் குட்டியுடன் புல் தின்பதை. குட்டி மிக சிறியதாக இருந்தது.பிறந்து சில நாட்கள் தான் ஆகி இருக்கும் போல் தோன்றியது.

பெண் யானைகள் குட்டி ஈன தன் கூட்டத்தி விட்டு தனியாக வந்து விடும். குட்டி ஈன்றபின் தங்கள் கூட்டத்தை தேடி சென்று சேர்ந்து விடும். இந்த குட்டி மிக சிறிதாக இருந்ததால் ஈன்று சில மாதங்களே ஆய் இருக்கும் என்று புரிந்தது. நான் நளினியை முன்னால் போக சொல்லிவிட்டு அதன் அருகில் சென்றேன்.

நான் மெதுவாக அதன் அருகில் சென்று நான் வைத்திருந்த பசுவின் காய்ந்த பால் கட்டிகளை கொடுத்தேன். அதன் சுவை அதற்கு பிடித்து போக அது மெதுவாக என்னுடன் வந்தது. தாய் அதை விட்டு சிறிது தூரத்தி இருந்ததால் நான அருகில் செல்ல முடிந்தது. கொஞ்ச தூரம் வந்ததும் நான் என் பெல்டை எடுத்து அதன் கழுத்தில் கட்டி இழுத்துக்கொண்டு வர ஆரம்பித்தேன். மெதுவாக அது என் கூட பால் கட்டிகளை தின்றுகொண்டு வந்தது. நாங்கள் தாய் யானையை விட்டு சிறிது தூரம் வந்து விட்டோம். தாய் யானை திரும்பி பார்த்து எங்கள் பக்கம் குட்டி இருப்பதைக்கண்டு பிளரிக்கொண்டு ஓடி வர ஆரம்பித்தது. எனக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அங்கிருந்த குப்பை இலைகளையும் தழைகளையும் சேர்த்து குவித்து என் கையில் எப்போதும் வைத்திருந்த தீப்பட்டியால் கொளுத்திவிட்டேன். இப்போது தீ எங்களுக்கும் யானைக்கும் இடையில் இருந்ததால் யானை பிளிரியபடி நின்று விட்டது. நான் வேக வேகமாக் யானைக்குட்டியை இழுத்துக்கோண்டு நளினியை  நோக்கி வந்து அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஏரியை நோக்கி ஓடினேன். எங்களை காணவில்லை என்றால் ஏரியில் போட் வரும் என எனக்கு தெரியும். அப்படியே தூரத்தில் போட் வந்து கொண்டிருந்தது.

நல்ல வேளையாக ஏரியில் ஃபாரஸ்ட் போட் வந்ததை நான் பார்த்து யானையையும் நளினியயும் இழுத்துக்கொண்டு கையை ஆட்டியபடி போட்டை நோக்கி ஓடினேன். போட்டில் என் தந்தை தான் வந்து கொண்டிருந்தார். ஃபார்ஸ்ட் ஆஃபீசரும் (நளினியின் தந்தை) இருந்தார். எங்களை பார்த்த்தும் அவர் போட்டில் இருந்த ‘ஹார்னை பலமாக ஒலிக்க செய்தார். எங்களை கண்டதும் அவர்களுக்கு அளவற்ற மகிழ்சி. முதல் நாளில் இருந்து எங்களை அவர்கள் தேடுகிறார்களாம். ஆஃபீசரும் அவர் மனைவியும் கலங்கி போனார்களாம். ஆனால் என் தந்தை தான் அவர்களை தேற்றினாராம். “கண்ணன் இருப்பதால் அவன் எப்படியும் பாப்பாவை கூட்டி வந்து விடுவான் என்று ஆறுதல் கூற்னாராம்.

எங்கள் இருவரையும் ஆனைக்குட்டியையும் போட்டில் ஏற்றி கொண்டு அவர்கள் வீட்டிற்கு அருகில் போட் எங்களை விட்டுச்சென்றது. யானையை அவர்கள் வீட்டின் பின்புறம் கட்டிபோட்டு வைத்தார்கள். அதனை பராமரிப்பது இப்போது என் வேலை ஆயிற்று. யானையை நன்கு பாதுகாத்து மறைத்து சாணம் தடவி வைத்தோம் ஏனென்றால் தாய் யானை அதை தேடி பல நாள அலைந்து திரிந்தது. நான் காட்டில் தீ வைத்ததை யாரிடமும் சொல்லவில்லை. அது தண்டிக்க பட வேண்டிய குற்றம் என்று எனக்கு தெரியும்.

யானைக்குட்டியை நளினி ‘ராஜா என் பெய்ரிட்டு அன்போடு வளர்த்து வந்தாள். ராஜாவிற்கு தலையில் ஒரு அழகான வெள்ளை தழும்பு போன்ற அடையாளம் இருந்தது. அது அவன் அழகை இன்னும் பெரிதாக காட்டியது.யானைக்குட்டியும் நன்றாக வளர்ந்து பெரிதாக ஆகி விட்டது. பல நாட்கள் நளினி நில ஒளியில் பாட்டு பாட ராஜாவும் தன் காதை ஆட்டி அசைந்து அதை ரசித்து வந்தான். அவன் ரொம்ப பெரிதாக ஆகி விட்டதால் அவனை காட்டில் கொண்டு போய் விட்டு விட சொல்லிவிட்டார்கள். ஒரு நாள் அவனை அடர்ந்த காட்டில் கொண்டு விட்டு விட்டு வந்தேன். நான் போட்டில் ஏறியதை பார்த்து அவன் பின்னால் ஓடி வர நான் உடனே போட்டை செலுத்திக்கொண்டு வந்து விட்டேன். அவன் பரிதாபமாக என்னை பார்த்துக்கொண்டு ஏரிக்கரையில் நின்றிருந்தான்.

கொஞ்ச நாளில் ஃபாரஸ்ட் ஆஃபீசரும் இடம் மாறி போய் விட்டார் குடும்பத்துடன். நளினி இப்பொது வளர்ந்த அழகான பெண் ஆகிவிட்டாள்.
நான் என் கொஞ்ச படிப்பை முடித்துக்கொண்டு ஆஃபீசில் கார்ட் டியூட்டியில் சேர்ந்து விட்டேன்.

அப்போது ஒருபுது ஆஃபீசர் வந்து சேர்ந்தார். அவர் குடும்பம் ஒரு நாள் இரவில் வெய்யில் அமர்ந்து பாடிக் களித்துக்கொண்டிருந்தனர். நான் அவர்கள் குவார்ட்டஸ் பின்னால் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென ‘கிறீச் என்ற அலறல் ஒலி கேட்க ஓடி வந்து பார்த்தால் ஒரு பிரம்மாண்டமான யானை அங்கு நின்று கொண்டிருக்க ஆஃபீசர் வீட்டின் உள்ளிருந்து துப்பாக்கி கொண்டு வருவதையும் அவர்கள் பெண் மயங்கி விழுந்திருந்ததையும் கணடேன். அந்த யானையின் நெற்றியில் வெள்ளை தழும்பை கண்ட நான் ராஜா என்று அலறினேன். ராஜ திரும்பி பார்த்தான். என்னை நோக்கி வந்தான். நான் ஆஃபீசரிடம் சுட வேண்டாம் என்றி கத்திவிட்டு ராஜாவின் கொம்பை பிடித்து இழுத்துக்கொண்டு காட்டுக்குள் கொண்டு விட்டேன். அவன் இன்னும் எங்கள் மேல் அன்பு கொண்டிருந்தது எனக்கு வியப்பாக இல்லை ஏனெனில் யானைகளுக்கு மிகுந்த ஞாபக சக்தி உண்டு.

அந்த ஆஃபீசரிடம் நான் முந்தய கதைகளை எல்லாம் சொல்லி ராஜவை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அவன் பழய ஞாபக்கத்தில் நளினியை தேடி வந்திருக்கிறான் என்றும் விளக்கினேன். சிறிது நாட்களில் இந்த ஆஃபீசரும் மாறி போய் விட்டார். புதிய ஆஃபீசர் வரப்போவதாக சொன்னார்கள்.

பல வருடங்கள் கழிந்தன. நானும் ஃபாரஸ்ட் கார்ட் ஆகி விட்டேன்.

ஒரு நாள் நான் காட்டுக்குள் இருந்து வரும் போது ஒரு ஆள் துப்பாகியை வைத்துக்கொண்டு ஒரு யானையை குறி பார்ப்பதையும் அருகில் ஒரு வான் நிற்பதையும் கண்டேன். அந்த யானை ராஜா தான். நான் அவனிடம் போய் துப்பாக்கியை தட்டி விட்டு சண்டை பிடிக்க அவன் “நீ யார் என்னிடம் சொல்ல என்று சீறினான். நான் அவனிடம் இந்த காட்டில் எந்த மிருகத்தையும் சுடக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது என்று கூறியபோது யாரோ ‘கண்ணன் என்று அழைப்பதை கேட்டேன். வானுக்குள் இருந்து ஒரு பெண் தான் அழைத்தது. அருகில் போய் பார்த்தபஒது அது நமது நளினி. கருத்து மெலிந்து இருந்த நளினியைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. “ என்ன நளினி நன்றாக இருக்கிறாயா என தழு தழுத்த குரலில் கேட்டேன். அவளுக்கும் கண்ணீர் வந்து விட்டது. அவள் “கண்ணா இவர் தான் என் கணவர். இப்போது இங்கு ஃபாரஸ்ட் ஆஃபீசராக வந்திருகிறார் என்றாள்.

நான் அவருக்கு வணக்கம் சொல்லி விட்டு அவர்களுக்கு வசதிகள் செய்ய விரைந்தேன். கொஞ்ச நாளில் அவர்கள் அங்கு ‘செட்டில் ஆகி விட்டார்கள். நளினி பழைய மாதிரி மகிழ்சியாக இல்லாமல் சுரத்தில்லாமல் இருந்தாள். புது ஆஃபீசர் ரொம்ப முரட்டு ஆள். எல்லோர் மேலும் எரிந்து விழுந்தார். கடு கடுவென எப்போதும் கோபத்துடன் இருந்தார். இதனால் தான் நளினி வருத்தப்பட்டு சந்தோஷம் இல்லாமல் இருந்தாள் போலும். இவருக்கு என்னை கண்டால் பிடிக்க வில்லை. 

ஆஃபீசருடைய ஒரு நண்பர் வந்திருந்தார். அவருடன் தான் தங்கி இருந்தார். ஒரு நாள் இரவில் அவர்கள் வெளியில் அமர்ந்து இருக்கும் போது நளினியை பாட சொல்ல நளினி முத்லில் மறுத்து பின்னர் பாடினாள். எனக்கு பயமாக இருந்தது. ராஜா வந்து விடுமோ என்று. நளினி பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென கரிய மலை அசைவதைப்போல ராஜா வந்து விட்டான். ஆஃபீசர் துப்பாகி எடுக்க ஓடினார். நளினியை தும்பிக்கையால் தழுவிக்கொண்டான் ராஜா. நளினியும் அவனை புரிந்து கொண்டு கண்ணீர் விட்டாள். நான் ஆஃபீசரிடம் ஓடி அவர் துப்பாகியை பறித்துக்கொண்டேன். அவருக்கு ராஜவை பிடிக்க வில்லை இவ்வளவு பெரிய யானை அவர் இதற்கு முன் கண்டதில்லை என சொன்னார். நான் அவரை சமாதானம் சொல்லிவிட்டு ராஜாவை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் போனேன். ராஜா ஆஜானுபபவாக மிக உயரமாக, நல்ல நீளமுள்ள தந்தங்களுடன்  கம்பீரமாக இருந்தான். அதன் தந்தம் தான் ஆஃபீசரை அவன் பால் ஈர்த்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த நாள் அவர் அவருடைய நண்பரை அழைத்துக்கொண்டு துப்பாகியுடன் காட்டுக்குள் போனார். பின்னால் நானும் போனேன். வழியில் கண்ட யானைகளை ஒன்றும் செய்யாமல் அவர் எங்கோ போனார். கடைசியில் ராஜாவைக்கண்டு பிடித்தார். எனக்கு புரிந்து விட்டது. அவர் ராஜாவை கொல்ல போகிறாரென்று. நான் என் கையில் இருந்த ஊது குழலை ஊதி, வெடி வைத்து அந்த யானை கூட்டத்தை காட்டுக்குள் துரத்தினேன். ராஜாவை சுட முடியாமல் அவர் வெறுத்துப்பொய் திரும்பி விட்டார். இரெண்டு நாள் அவர் கண்ணில் படாமல் பதுங்கி இருந்தேன். மூன்றாம நாள் என்னை மிகவும் திட்டி “எப்படி நீ யானைகள் விரட்டலாம் என்று வைதார் (திட்டினார்). நானும் “யானைகளை சட்டபடி சுடக்கூடாது என்றேன். அவர் “எனக்கு சட்டம் சொல்லி தருகிறாயா என்று கத்தினார். பின்னர் திட்டிக்கொண்டே திரும்பி விட்டார்கள்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் அவர் என்னை வேறு வேலையாக கோட்டயத்திற்கு அனுப்பினார். நான் அரை மனதாக தான் போனேன். திரும்பி வரும்போது இருட்டி இரவு வந்து விட்டது. கவலையுடன் நான் ஆஃபீசர் காட்டேஜுக்கு போனேன். தூரத்திலேயே ‘டுமீல், டுமீல் என்று துப்பாக்கி சுடும் சத்தமும் “வேண்டாம், வேண்டாம் என்ற நளினியின் குரலும் கேட்டது. பின்னர் ஒரே நிசப்த்தம்.. குலை நடுங்கி வேக வேகமாக நான் ஓடினேன். காட்டேஜுக்கு போனால் முற்றத்தில் நளினி விழுந்து கிடக்க அவள் இடுப்பை சுற்றிய தும்பிக்கையுடன் ராஜா விழுந்து கிடந்தான். ஆஃபீசர் துப்பாகியுடன் அவர்களை பார்த்தவாறு நின்றிருந்தார். பக்கத்தில் போய் பார்த்ததில் அவர்கள், நளினியும், ராஜாவும் இறந்து கிடப்பதை தெரிந்தது. எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று தெரியவில்லை. திடீரென பல கரிய உருவங்கள் நெருங்கி வருவதை கண்டு நான் பின்வாங்க பல யானைகள் திமு திமு என வந்து காட்டேஜ், ஆஃபீசர் அங்குள்ள பொருட்கள் என்று எல்லாவற்றையும் உடைத்து தும்சம் பண்ணின. ஆக்ரோஷ்த்துடன் ஆஃபீசரை மிதித்து கூழாக்கி விட்டன. ஆனால் ஒரு துரும்பு கூட ராஜாவின் மேலோ நளினி மேலோ விழவில்லை. அன்று இரவு முழுதும் அந்த யானைகள் வெறியுடன் அங்கிருந்த எல்ல பொருட்கள், மரங்கள், வீடுகள் என்று யாவற்றையும் அழித்து நாசமாக்கிவிட்டு பின் போயின. நான் தூரத்தில் இருந்து அதனை கண்ணீருடன் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

காலையில் இந்த நிகழ்சியை மேலிடத்திற்கு நான் தெரிவிக்க அங்கிருந்து அதிகாரிகள், உறவினர்கள் என்று எல்லோரும் வந்தனர். நளினி இறந்த இடத்திலேயே அவளையும், ராஜாவையும் புதைத்து வைத்தனர். புதிதாக வேறொரு இடத்தில் ஆஃபீசர் காட்டேஜ், ஆஃபீஸ் முதலானவை கட்டப்பட்டது. திருவிதாங்கூர் ராஜாவும் இந்த தேக்கடியை “பாதுகாக்கப் பட்ட காடாக பிரகடனம் செய்தார்.

நான் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் நளினி, ராஜா இறந்த தினத்தில் அவர்கள் புதைக்கப்பட்ட சமாதியில் இரவில் பூஜை செய்து வணங்குவது வழக்கம். அதே இடத்தில் அதே தினத்தில் அதே சமயத்தில் பல யானைகளும் வந்து வணக்கம் செய்வது வழக்கமாயிற்று. 

பின் குறிப்பு. 

என் நண்பன் கண்ணனிடம் பலமுறை பேசி, கேட்டு அறிந்தது தான் 

மேற்கண்டவை. கண்னன் முதலில் அதை சொல்ல விரும்பவில்லை.

 பலமுறை வற்புறுத்திக்கேட்ட பின் தான் இந்த விஷயங்கள் கண்ணன் 
தெரிவித்தார் என்று என் நண்பர் சொன்னார். இதையெல்லம் கேட்டு மிக 

வியப்படைந்து மறு நாள் அந்த இடத்தை பின்னும் ஒரு முறை போய் பார்த்து 

விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தேன்

Comments